மும்பை: மராத்தா ஒதுக்கீடு தொடர்பாக, மராட்டிய மாநில அரசு உச்சநீதிமன்றத்தை மீண்டும் அணுகவுள்ளதாகவும், எனவே, போராட்டங்களைக் கைவிடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே.
மராட்டிய இடஒதுக்கீடு அமலாக்கத்தை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்துள்ள நிலையில், இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார் உத்தவ் தாக்கரே.
“நாம் அனைவருமே தனிப்பட்ட முறையில் இந்த வழக்கை கவனித்து வருகிறோம். நாம் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்துவிடவில்லை. இதுதொடர்பாக மீண்டும் நீதிமன்றம் செல்வோம்.
நான், தற்போது பீகாரிலிருக்கும் மாநில எதிர்க்கட்சி தலைவருடனும் பேசியுள்ளேன். அவர், இந்த விஷயத்தில் அரசுடன் இணைந்திருப்பதாக உறுதி கூறியுள்ளார்.
பொதுமக்களால் போராட முடியும். ஆனால், இந்த அரசு அவர்களுடையது. நாங்கள் உங்களுடன் இருக்கையில், நீங்கள் சாலைக்கு வரவேண்டிய அவசியமில்லை. உங்களின் குரலை நாங்கள் நீதிமன்றத்தில் எதிரொலிக்கிறோம்” என்றார் உத்தவ் தாக்கரே.