புதுடெல்லி: இந்தியாவுக்கான தனது தடுப்பு மருந்து விநியோகத்தை, அரசு ஒப்பந்தங்களின் மூலமாக மட்டுமே செயல்படுத்த முடியும் என்றும், தனியார் நிறுவனங்கள் மூலம் சாத்தியமில்லை என்றும் அமெரிக்க மருந்து உற்பத்தி நிறுவனமான Pfizer தெரிவித்துள்ளது.
அந்நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது; உலக நாடுகளின் அரசுகளுடைய தடுப்பு மருந்து திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கவே Pfizer நிறுவனம் விரும்புகிறது. எனவே, எங்கள் தடுப்பு மருந்தை, அரசுகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அரசினால் அதிகாரமளிக்கப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்படியே மருந்தை விநியோகம் செய்ய முடியும்.
எனவே, இந்தியா தொடர்பாகவும் இதே நடைமுறையைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம். இங்கு, அரசின் தடுப்புமருந்து திட்டங்களுக்கு மட்டுமே ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், தனியார் மூலமாகவும், தடுப்பு மருந்தை பெறுவதற்கு அனுமதியளிக்க வேண்டுமென எழும் கோரிக்கைகளையடுத்து, Pfizer நிறுவனத்தால் இந்த பதில் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.