மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா ஆட்சி அமைக்கவில்லை என்றால், ஆட்சியமைப்பது பற்றி மாற்று வழியை தேடுவோம் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜெயந்த் பாட்டீல் கூறி இருக்கிறார்.
நாட்கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், மகாராஷ்டிரா முதலமைச்சர் யார் என்பதற்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. யாருக்கு முதலமைச்சர் பதவி என்பதில் பாஜக, சிவசேனா இடையே ஒருமித்த கருத்து ஏற்பட வில்லை அதுதான் காரணம்.
இந் நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிர தலைவர் ஜெயந்த் படேல் கூறியிருப்பதாவது: மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டியது இல்லை.
அதை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. முதலமைச்சர் யார் என்ற பிரச்னையில் பாஜக, சிவசேனா ஆகிய கட்சிகள் ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும்.
இல்லையென்றால் மாற்று வழியை நோக்கி நாங்கள் நகர வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவோம். எந்த சந்தர்ப்பத்திலும் பாஜக, சிவசேனா கூட்டணியை ஆதரிக்க மாட்டோம்.
சபாநாயகர் பொறுப்பை பெறக்கூடிய வகையில், எங்கள் கட்சிக்கு போதிய உறுப்பினர்கள் இல்லை என்றார். அதே நேரத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக், முக்கிய விஷயம் ஒன்றை கூறி இருக்கிறார்.
அவர் தெரிவித்து இருப்பதாவது: எங்கள் கட்சியையும், காங்கிரசையும் மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அழைத்து இருக்கிறார். இது முழுக்க, முழுக்க அரசியலற்ற சந்திப்பு.
இந்த சந்திப்பில், மகாராஷ்டிராவில் வெள்ளத்தில் ஏற்பட்ட இழப்புகளை பற்றியும், பயிர்களுக்கு நிவாரணம் அளிப்பது பற்றியும் வலியுறுத்துவோம் என்றார்.