மும்பை
பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா சிவசேனாவை தோற்கடிப்போம் என கூறியதற்கு அந்த கட்சியின் மூத்த தலைவரும் அமைச்சருமான ராம்தாஸ் கதம் பதில் அளித்துள்ளார்.
பாஜக உடன் மகாராஷ்டிரா மாநிலத்திலும் மத்திய அரசுடனும் சிவசேனா கட்சி கூட்டணி அமைத்துள்ளது. ஆயினும் சிவசேனா கட்சித் தலைவர்கள் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணிக்கு நடுவில் பனிப்போர் நிலவி வருகிறது. அதை ஒட்டி இரு கட்சித் தலவர்களும் ஒருவரை ஒருவர் அடிக்கடி தாக்கிப் பேசி வருகின்றனர்.
சமீபத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, ”பாஜக ஏற்கனவே உள்ள கூட்டணியை தொடர விரும்புகிறது. அவ்வாறு நடைபெற்றால் கூட்டணிக் கட்சிகளின் வெற்றுக்கு பாஜக பாடுபடும். அப்படி இல்லை எனில் அந்தக் கட்சிகளை தோற்கடிக்கும்” என சிவசேனாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். அமித்ஷாவின் இந்த அறிவிப்பு சிவசேனா கட்சியினரிடையே கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.
சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் மகாராஷ்டிரா மாநில அமைச்சருமான ராம்தாஸ் கதம், “பாஜக தற்போது நடந்து முடிந்த ஐந்து சட்டப்பேரவை தேர்தல்களிலும் கடும் தோல்வியை சந்தித்துள்ளது. அதை மறந்து விட்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள எங்களை மிரட்டிப் பார்க்கிறது.
நாங்கள் மோடி அலை வீசிய போதே மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் 63 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். எங்களை மிரட்டி பார்க்க வேண்டாம். கூட்டணி அமையவில்லை எனில் நாங்கள் பாஜகவை குழி தோண்டி புதைத்து விடுவோம்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.