1k-t
பெங்களூரு:
நாங்கள் கன்னடம் பேசும் தமிழர்கள். எங்களை துரத்த சதி நடக்கிறது என்கிறார்கள் கர்நாடகாவில் குடிசை பகுதியில் வாழும் கட்டிட தொழிலாளர்களான தமிழர்கள்.
ர்நாடகத்தில் தமிழருக்கெதிரான கலவரங்கள் வெடிக்கும் போதெல்லாம் அதிகம் பாதிக்கப்படும் பகுதி சஞ்சய் காந்தி நகர். தகரக் குடிசையில் வாழும் ஏழைத் தமிழர்கள் நிறைந்த பகுதி. இவர்களில் பெரும்பாலானவர்கள் கட்டிடத் தொழிலாளர்களே! இங்கு வசிப்பவர்கள் கிட்டத்தட்ட ஆயிரம் தமிழர்களாவர்.
வடக்கு பெங்களூரின் நந்தினி நகருக்கு அருகே இரு தொழிற்பேட்டைகளுக்கு இடையே இந்தப் பகுதி இருக்கிறது.
1991-இல் பெங்களூருவில் நடந்த மோசமான வன்முறையில் சிக்கி சின்னா பின்னப்பட்டது இந்தப் பகுதியே. பல தமிழ்ப்பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்ட அவலமும் அப்போது அரங்கேறியது.
ஆனால் விதான சவுதா உட்பட பெங்களூரின் அடையாளமாக நிமிர்ந்து நிற்கும் பல கட்டிடங்களைக் கட்டியது இவர்களும் இவர்தம் முன்னோர்களும்தான். அதற்கான நன்றிக்கடனாகத்தான் கன்னட வெறியர்கள் தங்களுக்கு இனவெறி தலைக்கேறும் போதெல்லாம் இவர்களை உருக்குலைத்து மகிழ்கிறார்கள்.
1991 கசப்பான நினைவுகள் இன்னும் இவர்கள் நெஞ்சத்தை விட்டு நீங்கவில்லை. இந்த நன்றிகெட்ட நரகத்தை விட்டு வெளியேறிவிடலாம் என்று இவர்கள் நினைத்தபோதுதான் காங்கிரஸ் எம்.எல்.ஏ ரமேஷ் இவர்களை ஆசுவாசப்படுத்தி, சில உதவிகள் செய்து அங்கேயே தங்க வத்தார்.
ஆனால் கடந்தமுறை நாதியற்றுக் கிடந்ததுபோல இல்லாமல் இந்தமுறை தமிழ் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வந்து தைரியம் சொல்லி போலீஸ் பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்துவிட்டுப் போனார்கள்.
பெங்களூவில் இதுபோன்று கிட்டத்தட்ட 2,350 சேரிகளில் ஆறுலட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இதில் 95% பேர் தமிழர்களாவர். காந்தி நகர், லட்சுமி நாராயணபுரம், பிரகாஷ் நகர், சிவாஜி நகர், சிக்பெட் இப்படி பல பகுதிகள் இதுபோன்ற சேரியை உள்ளடக்கியுள்ளன.
நகரில் கலவர நெருப்பு இன்னும் அணையாத நிலையில் சஞ்சய் நகர் மக்கள் இன்னும் வேலைக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். ஒருநாள் வேலைக்குப் போகாவிட்டால் வயிற்றில் எரியும் பசி நெருப்புக்கு பதில் சொல்ல  வழியில்லை.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தமிழடியான், இது காவிரிக்காக நடந்த கலவரம் அல்ல, தமிழர்களை இங்கிருந்து துரத்தும் நோக்குடன் நடத்தப்பட்ட திட்டமிட்ட அரசியல் நாடகம் என்ற புதிய சந்தேகத்தைக் கிளப்புகிறார். இங்கே வாழும் ஆயிரக்கணக்கான தமிழர்களின் மூதாதையர் பெங்களூருவை நிர்மாணிக்கும்போது கட்டிடத் தொழிலாளராகக் கொண்டுவரப்பட்டவர்கள். இவர்கள் வெள்ளேந்தியாக “நாங்கள் கன்னடம் பேசும் தமிழர்கள்: இது எங்கள் தாய்மண்” என்று இந்த மண்ணை நேசித்து வாழும் அப்பாவி மக்களாவர். ஆனால் இவர்களை இங்கிருந்து துரத்த சதி நடக்கிறது என்று மனம் திறக்கிறார்.
ஆனால் இதை மறுக்கும் வேலு நாயக்கர் என்ற இப்பகுதியின் முக்கிய பிரமுகர். இது சீதாராமையாவின் அரசை கவிழ்க்க நடந்த சதி, அதில் அப்பாவி தமிழர்கள் பலிகடாக்களாக ஆக்கப்பட்டுவிட்டார்கள் என்கிறார்.