புதுடெல்லி:
நடைபாதைகள் ஆக்கிரமிப்பு குறித்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நாங்கள் உத்தரவிட்டால் ஊழல் ஒழிந்துவிடுமா? என்றனர். மேலும் நாட்டில் தூய்மையான ராம ராஜ்ஜியத்தை உருவாக்க உத்தரவிட முடியாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
நாடு முழுவதும் சாலைகள் மற்றும் நடைபாதைகளில் செய்யப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காண கோரி தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர் தலைமையிலான அமர்வு தங்களது உத்தரவின் மூலம் நாட்டில் அனைத்து விஷயங்களும் நடக்கிறதா? என கேள்வி எழுப்பினர்.
உங்களின் இந்த ஒரு மனுவை அடிப்படையாக வைத்து நாடு முழுவதும் உள்ள சாலைகளில் ஆக்கிரமிப்பு இருப்பதாக முடிவுக்கு வர முடியாது. நீங்கள் கூறுவதை வைத்து, நாட்டில் அனைத்துமே தவறாக நடப்பதாக எவ்வாறு கருத முடியும்? இந்தப் பிரச்னை தொடர்பாக உயர் நீதிமன்றங்களை நீங்கள் ஏன் அணுகவில்லை? என தாக்குர் கேள்வியெழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த மனுதாரர், “எத்தனை உயர் நீதிமன்றங்களைத்தான் அணுகுவது? இங்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் உச்ச நீதிமன்றம் வந்தேன்; எனவே, எனது மனுவை விசாரிக்க வேண்டும்’ என்றார்.
இதையடுத்து, தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் கூறியதாவது:
நீதிமன்றம் உத்தரவிட்டதும் ஊழலே இல்லாத நிலை ஏற்படுமா? எனவும் நீதிபதிகள் வினவினர். நாட்டில் ராமராஜ்ஜியத்தை உருவாக்க வேண்டும் என்று தங்களால் உத்தரவிட முடியுமா? என்றும் அவர்கள் கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த மனுதாரரின் வழக்கறிஞர் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கத் தவறினால் வேறு யார் தான் என்ன செய்ய முடியும் என கூறினார்.
நீதிமன்றத்துக்கு என வரையறுக்கப்பட்ட அதிகார வரம்புக்குள் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள் நாட்டில் அனைத்தும் தவறாக நடக்கிறது என்ற யூகத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.