ஐதராபாத்
பிரதமரிடம் அச்சமின்றி கருத்துக்களை எடுத்துரைத்து வாதம் செய்யக்கூடிய தலைவர்கள் தேவை என பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறி உள்ளார்.
கடந்த 1991 முதல் 1993 வரை பாஜகவின் தலைவராகப் பொறுப்பில் இருந்த மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆவார். இவர் தனது தலைமைக்காலத்தில் கன்யாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ஏக்தா யாத்திரையை நடத்தினார். அப்போது அந்த யாத்திரையில் தற்போதைய பிரதமர் மோடி ஒருங்கிணைப்பாளராக இருந்துள்ளார். கடந்த ஜூலை 28 ஆம் தேதி மரணம் அடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயபால் ரெட்டியின் இரங்கல் கூட்டத்தில் ஜோஷி கலந்துக் கொண்டார்
நேற்று ஐதராபாத்தில் நடந்த அந்த இரங்கல் கூட்டத்தில் துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட அனைத்துக் கட்சியைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். அத்துடன் இடதுசாரி கட்சிகள் தலைவர் சீதாராம் யெச்சூரி, டி ராஜா, ஷரத் யாதவ் மற்றும் காங்கிரசின் அபிஷேக் சிங்வி ஆகியோரும் ஜெய்பால் ரெட்டியின் நினைவேந்தல் கூட்டத்தில் பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரங்கல் கூட்டத்தில் முரளி மனோகர் ஜோஷி, “ கடந்த 1990களில் அறிவுசார் சொத்துரிமை தொடர்பான நாடாளுமன்றக் குழுவில் தானும், ரெட்டியும் உறுப்பினராக இருந்தோம். எந்த பிரச்சினையாய் இருந்தாலும், அவர் ஒவ்வொரு மட்டத்திலும் தனது கருத்தை வெளிப்படுத்துவார்
அது மட்டுமின்றி ஐ.கே. குஜ்ரால் அரசில் எஸ்.ஜெய்பால் ரெட்டி அமைச்சராகப் பதவி ஏற்றார். அதன் பிறகும் நாடாளுமன்றத்துக் குழுவின் கருத்துக்களைப் பிரதமரிடம் வெளிப்படையாகத் தெரிவிக்கும் பழக்கம் ரெட்டியிடம் இருந்தது.
ஜெயபால் ரெட்டி போல ஒரு தலைவருக்கு இன்று தீவிர தேவை இருப்பதாக நான் உணர்கிறேன், அந்த தலைவர் கொள்கைகளின் அடிப்படையில் பயமின்றி, பிரதமர் மகிழ்ச்சியடைவாரா அல்லது கோபப்படுவாரா என்று கவலைப்படாமல் கருத்துக்களைத் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும், பிரதமருடன் வாதிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.