டெல்லி: உக்ரைன் தொடர்பாக பிரதமர் மோடி – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இருவரும் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆலோசனையின் போது, இருதரப்பு உறவு, ரஷ்யா – உக்ரைன் விவகாரம், இந்தோ பசிபிக் பிராந்திய பாதுகாப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, அமெரிக்காவும், இந்தியாவும் உலகின் மிகச்சிறந்த ஜனநாயக நாடுகளாக திகழ்கிறது.
தற்போது உக்ரைனில் நிலவும் சூழ்நிலை வருத்தமளிக்கிறது. உக்ரைனில் சிக்கிய மாணவர்களை கடும் சவால்களுக்கு இடையே மீட்டோம். விரைவில் ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் முடிவுக்கு வரும். ரஷ்ய அதிபர் புதினை, உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியுடன் நேரடியாக பேசுமாறு வலியுறுத்தினேன் என தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மற்றும் பிற அண்டை நாடுகளுக்கு மருந்துகள் மற்றும் பிற நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளோம். உக்ரைனின் கோரிக்கையை ஏற்று, விரைவில் மற்றொரு மருந்துப் பொருட்களை அனுப்ப உள்ளோம் என்றும் பைடனிடம் மோடி கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் நாட்டிற்கு நிவாரண பொருட்கள் அனுப்பிய இந்தியாவுக்கு அதிபர் பைடன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.