சென்னை: கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க செல்லும் விஜய்-க்கு  காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டுள்ளோம் என தவெக நிர்வாகி  தெரிவித்துள்ளார்.

 கடந்த செப்.27ஆம் தேதி கரூா் வேலுச்சாமிபுரத்தில்  தவெக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொண்டாா். இந்த பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி தவெக தொண்டா்கள், பொதுமக்கள்,   பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 41 போ் உயிரிழந்தனா். 60 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தி யிருக்கிறது. இந்த விவகாரம் அரசியலாக்கப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தவெகவினர், அதிமுகவினர், பாஜகவினர் திமுக அரசை குற்றம் சாட்டி வருகிறது.   இதற்கிடையில்,  இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தவெக நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்தனர். மேலும் இந்த நிகழ்வுகள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்களையும் அரசு கைதுர செய்து வருகிறது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க தவெக தலைவர் விஜய்  கரூர் செல்ல உள்ளதாகவும், அதற்காக காவல்துறையிடம்  பாதுகாப்பு கோரியுள்ளதாகவும் தவெக கொள்கை பரப்பு செயலர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்த.

 தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ்  இன்று (புதன்கிழமை)  காலை தனியார் ஹோட்டல் ஒன்றில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற எங்களை அனுப்பி உள்ளார். அதன் பேரில் பாதிக்கப்பட்டவர்களைக் கடந்த இரண்டு நாள்களாக 33 பேரை சந்தித்து விஜய்யை விடியோ கான்பரன்ஸ்ங்கில் மக்களிடம் பேச வைத்தோம். அப்போது அவர்கள் விஜய்யிடம், நெரிசல் சம்பவத்தில் உங்களிடம் எந்த தவறும் கிடையாது, நீங்கள் தைரியமாக இருங்கள் என்றனர்.  மேலும் விஜய் கரூர் வந்து விரைவில் உங்களை சந்திப்பேன் என்று பாதிக்கப்பட்டவரிடம் தெரிவித்தார்.

இதனால், விஜய்யை கரூர் வந்து பாதிக்கப்பட்டவர்களை பார்க்கும் வகையில் அவருக்கு உரிய பாதுகாப்பு கேட்டு சென்னை டிஜிபி அலுவலகத்தில்  மின்னஞ்சல் மூலம் மனு அளித்தோம். இன்று எங்களது கட்சி நிர்வாகிகள் டிஜிபியை நேரில் சந்தித்து இது தொடர்பாக மனு அளிக்க உள்ளனர். தற்போது விசாரணை குழு இந்த சம்பவத்தை விசாரித்து வருகிறது. இந்த விசாரணைக்குப் பின் இங்கு என்ன நடந்தது என்பது மக்களுக்கு தெரிய வரும்” என்றார்.