‘We don’t want cows which caused the death of our father’: Pehlu Khan’s family
85 வயதான அந்த மூதாட்டிக்கு பார்வை சரியாக தெரியவில்லை. காது முழுமையாக கேட்கவில்லை. ஆனால் தனது மகனைக் கொன்றுவிட்டார்கள்… கொன்று விட்டார்கள்.. என்று மட்டும் அவ்வப்போது உரத்து முழங்குகிறார். அதற்கு மட்டும்தான் அவரது உடலில் தெம்பிருக்கிறது.
ஹரியானா மாநிலம், ஜெய்சிங்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அங்கூரி பேகம். அவரது மகன் பேலு கான், பசுக்களைக் காக்கும் குழுவினரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். உரிய அனுமதியின்றி மாடுகளைக் கொல்வதற்காக ஏற்றிச் சென்றதாக கூறி பசுக்காப்பாளர்கள் கும்பல், பேலுகானையும், அவரது மகன் உள்ளிட்ட சிலரையும் கண்மூடித் தனமாக தாக்கியுள்ளனர். இதில் 55 வயதான பேலுகான் அப்போதே உயிரிழந்தார். உடனிருந்த ஆசிப்கான், பசுக்காப்பாளர்கள் தாக்கியதில் முதுகுத் தண்டுவடம்நொறுக்கப்பட்டு, பிறர் உதவியுடன் வாழ்ந்து வருகிறார். இந்த அதிர்ச்சியில் உறைந்து போன பேலுகானின் தாயார் அங்கூரி பேகம், அன்று முதல் தனது மகனைக் கொன்றுவிட்டார்கள் என்பதைத் தவிர வேறு எதுவும் பேசுவதில்லை. இந்த நிலையில்தான், சொந்த கிராமத்தை விட்டு எதற்காகவும் வெளியே வராத அங்கூரி பேகத்தை, ஹரியானாவில் இருந்து டெல்லிக்கு வரும் அனைத்து சாலைகளின் வழியாகவும் பயணம் செய்து டெல்லி ஜந்தர் மந்தருக்கு அழைத்து வந்துள்ளனர் அவரது குடும்பத்தினர்.
ஜந்தர் மந்தர் போராட்டக்களத்தில் அங்கூரி பேகத்துடன் அமர்ந்திருந்த அவரது பேரனும், பேலுகானின் மகனுமான, ஆரிப் கான் இந்த விவரங்களைச் செய்தியாளர்களிடம் கூறினார். மாடுகளை ஏற்றிச் செல்லும் வழியில் திடீரென வழிமறித்த பசுக்காப்பாளர்கள் கும்பல், அதனைக் கொண்டு சென்ற பேலுகான் உள்ளிட்டோரை கொலை வெறியுடன் தாக்கியதுடன், மாடுகளையும் கவர்ந்து சென்றுவிட்டதாக ஆரிப்கான் தெரிவித்தார். சம்பவ இடத்தில் என்ன நடந்தது என்பதையே தங்களால் முழுமையாக உணரமுடியவில்லை என்று கூறும் ஆரிப்கான் அதன் அதிர்ச்சியில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. என் தந்தையைக் கொல்லக் காரணமாக இருந்த அந்த மாடுகள் இனி எங்களுக்கு தேவையில்லை என்று ஆத்திரத்துடன் கூறும் ஆரிப்கான், அவற்றை அந்த பசுக்காப்பாளர்களே வைத்துக் கொள்ளட்டும் என்றார். சம்பவம் நடந்து 19 நாட்களாகியும், ஹரியானா அரசின் அதிகாரிகளில் ஒருவர் கூட வந்து இந்தக் குடும்பத்தைப் பார்க்கவோ, ஆறுதல் கூறவோ முன்வரவில்லை என்று, போராட்டத்திற்காக அந்தக் கிராமத்தில் இருந்து உடன் வந்தவர்கள் கூறினர்.
சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரியினர், தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும், தன்னார்வ அமைப்புப் பிரதிநிதிகளும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
மோடி அரசு பதவிக்கு வந்ததில் இருந்து பசுக்காப்பாளர்கள் என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம் மக்கள் அடித்துக் கொல்லப்படுவது தொடர்கதையாகி வருவதாக கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா குற்றம்சாட்டினர். தாத்ரி சம்பவம் முதல், பசுக்களின் பெயரால் நடந்த படுகொலைகளைப் பட்டியலிட்ட அவர்கள், பாஜக ஆளும் மாநிலங்களில், பசுக்காப்பாளர்களால் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நீதிகிடைக்க பாடுபட வேண்டிய அதிகாரிகள், அந்த சம்பவம் நடந்ததற்காகன ஆதாரங்களை அழிப்பதிலேயே கவனத்துடன் செயல்படுதவதாக அங்கிருந்த மற்றவர்கள் கூறினர். தற்போது ஹரியானாவில், பசுக்காப்பாளர்களால் கொல்லப்பட்ட பேலுகானின் குடும்பத்தினருக்கு உரிய நீதிகிடைக்க வேண்டும் என போராட்டத்தில் பங்கேற்ற அமைப்புகள் சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.