டில்லி:
‘‘தியாகிகள் பகத் சிங், உதாம் சிங் உள்ளிட்ட தியாகிகள் தொடர்பான தகவல்கள் எதுவும் இல்லை’’ என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் சண்டிகரை சேர்ந்த வக்கீல் அரோரா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட தகவல்களுக்கு இந்த பதிலை உள்துறை தெரிவித்துள்ளது. மேலும் தியாகிகள் பட்டியலை பராமரிப்பது இல்லை என்று தெரிவித்துள்ள இத்துறையினர் மனுவை இந்திய ஆவண காப்பகத்துக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இது தொடர்பாக உள்துறை செயலாளர் சார்பில் அளிக்கப்பட்டுள்ள பதிலில்,‘‘ அதிகாரப்பூர்வ பட்டியலில் தியாகிகள் பகத் சிங், உதாம் சிங் ஆகியோர் இடம்பெறுவது தொடர்பாக மத்திய அரசின் கொள்கைகள் குறித்த தகவல்களை கேட்டுள்ளீர்கள். மத்திய உள்துறை அமைச்சகம் உயிரோடு இருக்கும் அல்லது இற ந்தவர்கள் யாரையும் தியாகிகள் என்று அறிவிப்பது கிடையாது.
இவ்வாறு அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ பட்டியலை பராமரிப்பதும் இல்லை. அதனால் இது குறித்த தகவல்கள் எதுவும் அளிக்க இயலாது. எனினும் உங்களது விண்ணப்பம் இந்திய ஆவண காப்பகத்துக்கு மாற்றம் செய்யப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவண காப்பகமும் தகவல் அளிக்க மறுத்தால் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர அரோரா முடிவு செய்துள்ளார்.