டில்லி
செயற்கைக் கோள்களை தாக்கி அழிக்கும் ஏ சாட் சோதனைக்கு முந்தைய அரசிடம் அனுமதி கோரவில்லை என முன்னாள் டிஆர்டிஓ தலைவர் சரஸ்வத் ஒப்புக் கொண்டுள்ளார்.
சென்ற வாரம் இந்தியா செயற்கைக் கோள்களை தாக்கி அழிக்கும் ஏ சாட் ஏவுகணை சோதனையை நிகழ்த்தியது. அந்த சோதனை வெற்றி அடைந்ததை நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தெரிவித்தார். தேர்தல் நேரத்தில் அவர் இவ்வாறு அறிவித்த்து சர்ச்சை ஆகி அதன் பிறகு அது தேர்தல் நடத்தை விதிகளை மீறியது அல்ல என ஆணையம் தெரிவித்தது. அதன் பிறகு அடுத்த சர்ச்சை தொடங்கியது.
முன்னாள் டிஆர்டிஓ தலைவரான சரஸ்வத் கடந்த மன்மோகன் சிங் ஆட்சியின் போதே இந்த ஏ சாட் ஏவுகணை சோதனைக்கு அனுமதி கோரியதாகவும் ஆனால் அரசு மற்றும் தெசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட யாரும் பதில் அளிக்கவில்லை எனவும் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஏ சாட் குறித்த ஒரு அதிகாரபூர்வமற்ற அறிவிப்பை அளித்த டிஆர்டிஓ சோதனை குறித்து அனுமதி கோரவில்லை என தெரிவித்தார்.
இந்நிலையில் சரஸ்வத் தனது மற்றொரு அறிக்கையில், “அப்போதைய வழக்கப்படி டிஆர்டிஓ தயாரித்துள்ள ஏவுகணை மூலம் செயற்கைக் கோள்களை தாக்கி வீழ்த்த முடியும் என தெரிவித்தோம். இந்த அறிக்கையை தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கும் அனுப்பி வைத்தோம். . இந்த அறிக்கையை அரசு ஆராய்ந்து அதற்கு பதில் அளிக்கும் என எதிர்பார்த்தோம்.
ஆனால் அரசு மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோர் பதில் அளிக்கவில்லை. எனவே அரசுக்கு இந்த ஏவுகணையில் ஆர்வம் இல்லை என நாங்கள் முடிவு எடுத்தோம். நாங்கள் எழுத்து பூர்வமாக அனுமதி கோரவில்லை. அறிக்கை மட்டுமே அளித்தோம். அதற்கு பதில் இல்லாததால் மேற்கொண்டு முயற்சி செய்யவில்லை. இந்த விவகாரத்தில் சிவசங்கர் மேனன் கூறியது சரியானதாகும்” என தெரிவித்துள்ளார்.