சிங்கள மக்கள் சம்மதமின்றி தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க முடியாது : இலங்கை அதிபர்

Must read

கொழும்பு

லங்கையில் பெரும்பான்மையினராக உள்ள சிங்கள மக்கள் சம்மதம் இல்லாமல் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க முடியாது என அதிபர் கோத்தபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், அரசுப் படைகளுக்கும் 37 ஆண்டுகளாக நடந்த போர் முடிவுக்கு வந்தது. இந்த போரில், புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார்.  சுமார் 4 மாதங்களாக நடந்த இறுதிக்கட்ட போரில், 40 ஆயிரம் தமிழர்களை, இலங்கை ராணுவம் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்தப் போர்க் குற்றத்துக்கு, ஐநா மனித உரிமை ஆணைய தீர்மானங்கள் கடந்த 2013ம் ஆண்டில் இருந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இலங்கையின் முன்னாள் அதிபர் சிறிசேனாவின் அப்போதைய அரசு ஆதரவுடன், கடந்த 2015ம் ஆண்டு ஐ.நா மனித உரிமை ஆணையம் ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. அந்த தீர்மானத்தில், ‘சர்வதேச விசாரணை அமைப்பை ஏற்படுத்தி இலங்கை ராணுவம் மற்றும் புலிகள் அமைப்பினர் மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்,’ எனக் கூறப்பட்டுள்ளது.

ஐநாவின் தீர்மானம் குறித்து இலங்கை புதிய அதிபர் கோத்தபாய ராஜபக்சே விடம் கருத்துக் கேட்கப்பட்டது.  அதற்கு கோத்தயாபாய, “கடந்த  2015ம் ஆண்டு ஐ.நா மனித உரிமை கவுன்சில் போர்க் குற்றம் பற்றி சிறிசேனா அரசின் ஆதரவுடன் நிறைவேற்றிய தீர்மானத்தை தற்போதைய வடிவில் நான் பரிசீலிக்க முடியாது. எனது அரசு சொந்த நாட்டுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை.

அத்துடன், பெரும்பான்மை மக்களான சிங்களர்கள் சம்மதம் இல்லாமல் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கப்படவும் வாய்ப்பில்லை.. ஹம்பந்தோட்டா துறைமுகம் சீனாவுக்கு 99 ஆண்டுக் கால குத்தகைக்கு விடப்பட்டது வர்த்தக அடிப்படையிலானது.

மீண்டும் அந்த ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்றாலும் இந்த ஒப்பந்தத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆராயப்பட வேண்டியது முக்கியம். இந்த கவலையைச் சீனாவும் புரிந்து கொண்டுள்ளது.” எனப் பதில் அளித்துள்ளார்.

More articles

Latest article