மும்பை: உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி வலுவானதாக இருக்கலாம். ஆனால், கோப்பையை யார் வெல்வார்கள்? என்பதை கணிப்பது எளிதல்ல என்று கூறியுள்ளார் முன்னாள் தென்னாப்ரிக்க வீரர் ஜான்டி ரோட்ஸ்.

இந்த 2019 உலகக்கோப்பை போட்டியானது Round Robin எனும் முறையில் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, கலந்துகொள்ளும் 10 அணிகளும் ஒன்றுக்கொன்று மோதும். அதனடிப்படையில் முதல் 4 இடங்களைப் பெறும் அணிகள், அரையிறுதிக்குப் போகும்.

எனவே இதனடிப்படையில்தான் கருத்துக் கூறியுள்ளார் ஜான்டி ரோட்ஸ். “வேறு எந்த அணியும் கொண்டிராத சிறப்பை இந்திய அணி கொண்டுள்ளது என்று கூறிவிட முடியாது. இந்திய அணி வலுவானதாக இருக்கலாம். ஆனால், இதேபோன்ற ஒரு நிலை தமக்கும் இருப்பதாக கூடுதலாக 6 அணிகள் கூறிக்கொள்ள முடியும்.

போட்டி நடைபெறும் நாளில், ஆடுகளம் உள்ளிட்ட சூழல்களைப் பொறுத்து, சரியான 11 பேரை எந்த அணி தேர்வுசெய்து விளையாடுகிறதோ, அந்த அணிக்கே வாய்ப்புகள் அதிகம்” என்று தெரிவித்துள்ளார் அவர்.

இந்த ஜான்டி ரோட்ஸ், உலகின் மிகச் சிறந்த ஃபீல்டர் எனப் பெயர்பெற்றவர் என்பதும், அதற்காக அவர் இன்றளவும் அறியப்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.