பீஜிங்

கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு அதிகரித்து வருகிறது.  கடந்த சில நாட்களாக உலக அளவில் தினசரி பாதிப்பில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.   நேற்று வரை இந்தியாவில் 1.62 கோடிக்கும் மேல் பாதிக்கப்பட்டு சுமார் 1.87 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.  தற்போது 24.22 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால் நாடெங்கும் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து, வெண்டிலேட்டர்கள்,  உள்ளிட்டவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.   இந்திய அரசு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.   ஆயினும் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை.

நேற்று சீன நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின், “இந்தியா தற்போது கொரோனா அதிகரிப்பால் மிகவும் கடுமையான ஆபத்தில் உள்ளது.   இதைச் சீன அரசு கவனித்து வருகிறது.  உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா பரவல் என்பது பொதுவான எதிரியாக உள்ளது.  எனவே அனைத்து சர்வதேச நாடுகளும் தற்போது ஒருவருக்கொருவர் அவசியம் உதவ வேண்டும்.

தற்போது இந்தியாவில் தற்காலிகமாகப் பல மருந்துகள், மற்றும் மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் போன்றவற்றுக்குத் தட்டுப்பாடு உள்ளதாகச் சீனாவுக்குத் தெரிய வந்துள்ளது.  எனவே இந்தியாவுக்கு தேவையான உதவிகளையும் ஆதரவையும் அளித்து கொரோனாவை கட்டுப்படுத்த உதவி செய்ய சீனா தயாராக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.