சென்னை: சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல  என பாமக உறுப்பினர்களின் கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின்  2024ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்து,  கடந்த 19ஆம் தேதி பொது நிதிநிலை அறிக்கையும், 20ந்தேதி  வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் (பிப்.22) நிறைவுபெறுகிறது. இன்றைய கடைசி நாளில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.

முன்னதாக இன்று காலை கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துரை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது  சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பாமக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்,  சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து நிதிநிலை அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது, சட்டப்பேரவையிலும் பல நேரங்களில் பதில் சொல்லப்பட்டிருக்கிறது.

நீங்கள் சொல்கிற சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, உங்களுக்கு சாதகமாகதான் நாங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். குரல் கொடுத்து வருகிறோம். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

அப்போது பாமகவினர் மேலும் பேச முற்பட்டனர். அதற்கு சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை. இதனால், தங்களுக்கு   பேச வாய்ப்பளிக்காததால்  வெளிநடப்பு செய்வதாக கூறி பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.