டெல்லி:

குற்றவாளியின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும், நீதியை பெற நாங்கள் மேலும் ஒருபடி  நெருக்கமாக உள்ளோம் என்று நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி தெரிவித்துள்ளார்.

மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட  வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில்,  4வது குற்றவாளியான அக்சய் குமாரின் சீராய்வு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷன் மற்றும் எஸ்.ஏ.போபண்ணா அடங்கிய அமர்வு  விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில், குற்றவாளி அக்ஷய் குமார் சிங் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதன்மூலம் அவர்களின்  தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள  நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி, இது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக  தெரிவித்துள்ளார். நீதியை பெற நாங்கள் மேலும் ஒருபடி முன்னேறி உள்ளோம், இந்த வழக்கில் நீதிமன்றம் எங்களுக்கு ஆதரவாகவே  தீர்ப்பு வழங்கி உள்ளது என்று கூறினார்.

மேலும், இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, 18 மாதங்கள் கடந்துவிட்டன, அவை மதிப்பாய்வை எடுக்கவில்லை. இப்போது நேரம் முடிந்துவிட்டது. பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற விசாரணைக்கு நாங்கள் காத்திருக்கிறோம். எங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். இன்று வாரண்டிற்கான தேதியைப் பெறுவோம் என்று நம்புகிறேன். நாங்கள் மட்டுமல்ல; நாடு முழுவதும் உள்ள தாய்மார்கள் மற்றும் மகள்கள் தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள் என்று  ஆஷா தேவி உணர்ச்சி பொங்க கூறினார்.