குலதெய்வ ஆசீர்வாதம் கிடைக்க உதவும் இலுப்பை_எண்ணெய்_தீபம்
குலதெய்வத்தை நினைத்து நம் வீட்டில் ஒரு இலுப்பை எண்ணெய்யில் தீபம் ஏற்றினால் நிச்சயம் உங்கள் குலதெய்வத்தின் ஆசீர்வாதத்தை நீங்கள் பெற முடியும்.
நம் வீட்டில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சினைக்கும் மூல காரணமாக இருக்கும் ஒரு விஷயம் என்றால் அது பெரும்பாலானோருக்குப் பணமாகத்தான் இருக்கும். அந்தப் பணம் நம் வீட்டில் நிரந்தரமாகத் தங்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் நம் குல தெய்வத்தின் ஆசீர்வாதம் நமக்கு முழுமையாகக் கிடைத்திருக்க வேண்டும். அனேகமானவர்களின் வீட்டில் குலதெய்வ வழிபாட்டை மறந்துவிடுகிறார்கள்.
அதாவது வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ குலதெய்வ கோவிலுக்குச் சென்று வழிபடுவது என்பது வேறு. தினம்தோறும் நம் வீட்டில் அந்த குலதெய்வத்தை நினைத்து வழிபடுகின்றோமா, என்றால் பலரின் பதில் இல்லை என்றுதான் வரும். குலதெய்வத்தை நினைத்து நம் வீட்டில் ஒரு தீபம் ஏற்றினால் நிச்சயம் உங்கள் குலதெய்வத்தின் ஆசீர்வாதத்தை நீங்கள் பெற முடியும். அது என்ன தீபம் என்பதைத் தெரிந்து கொள்வோம்.
மண்ணால் செய்யப்பட்ட ஒரு அகல் விளக்கில், ஒரு ரூபாய் நாணயத்தைப் போட்டு, இலுப்பை எண்ணெய் ஊற்றி, இரண்டு திரிகளை ஒன்றாகச் சேர்த்துத் திரித்து, கிழக்கு பக்கம் நோக்கி உங்கள் வீட்டுப் பூஜை அறையில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும். அந்த தீபத்தை ஏற்றும்போது உங்கள் குலதெய்வத்தின் பெயரை உங்கள் மனதிற்குள் உச்சரித்துக்கொண்டே ஏற்றுவது அவசியமாகும். இந்த தீபமானது உங்கள் குலதெய்வத்திற்கு மட்டும் என்ற எண்ணத்தோடு ஏற்றவேண்டும். இந்த தீபத்தை உங்களால் முடிந்தால் பிரம்ம முகூர்த்த நேரமான காலை 4.00 மணியிலிருந்து 5.30 மணிக்குள் ஏற்றுவது இன்னும் சிறந்தது. முடியாதபட்சத்தில் காலை ஏழு மணிக்குள்ளாவது இந்த தீபத்தை ஏற்றி விடுங்கள்.
இலுப்பை எண்ணெய்க்கு அனைத்து தெய்வங்களின் சக்தியையும் ஈர்க்கும் தன்மை உடையது. சிவன் கோவில்களில் பெரும்பாலும் இலுப்பை எண்ணெய்யின் மூலம் தான் விளக்கினை ஏற்றி வந்தார்கள். குத்து விளக்கில் இலுப்பை எண்ணெய் ஊற்றி வெள்ளை திரி போட்டு வெள்ளிக்கிழமையன்று பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றினால் அஷ்டலட்சுமி அருள் கிடைக்கும். இதே போல் மஞ்சள் திரையிட்டால் குபேரன் அருள் கிடைக்கும். சிகப்பு திரையிட்டால் நம் கடன் தொல்லை தீரும். இப்படியாக இலுப்பை எண்ணெய்யில் முறையாகத் தீபத்தை ஏற்றும்போது நம்மால் நல்ல பலனை அடைய முடியும்.
எந்த தெய்வத்தை எப்படி வழிபட்டாலும் சரி, வழிபடவில்லை என்றாலும் சரி உங்கள் வீட்டுக் குலதெய்வத்தை மறந்தும்கூட தயவுசெய்து மறந்து விடாதீர்கள். ஏனென்றால் நம் குலத்திற்கு எந்த விதமான கஷ்டங்களும் ஏற்படாமல் பாதுகாத்து வர வேண்டும் என்று, நம் முன்னோர்கள் காலம் காலமாக வழிபட்டு வரும் தெய்வம் தான் குலதெய்வம். இப்படிப்பட்ட குல தெய்வத்தை மறப்பது என்பது நம் குடும்பத்திற்கு நல்லது அல்ல.