வயநாட்டில் கடந்த ஜூலை 30ம் தேதி செவ்வாயன்று நடைபெற்ற நிலச்சரிவில் சூரல்மலை, முண்டக்கை மற்றும் அட்டமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலை கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது.
பேரழிவை ஏற்படுத்திய இந்த நிலச்சரிவில் இதுவரை 341 பேர் உயிரிழந்ததாகவும் 250 பேரைக் காணவில்லை என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
200 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் இந்தப் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 1000க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் பலரின் உடல் பாகம் சாலியாற்றில் அடித்துச் செல்லப்பட்டு பல கிலோமீட்டர் தொலைவில் கரை ஒதுங்கின.
உடல்பாகங்களை உடற்கூறாய்வுக்கு அனுப்பிய மாவட்ட நிர்வாகம் டி.என்.ஏ. சோதனைக்கும் உத்தரவிட்டது.
இந்த உடல்பாகங்கள் அழுகும் நிலையில் உள்ளதால் இவற்றை உரிய முறையில் அடக்கம் செய்ய வயநாடு பகுதியில் உள்ள பல்வேறு கிராம பஞ்சாயத்து தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து அந்தந்த கிராமத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த உடல்பாகங்கள் மற்றும் அடக்கம் செய்யப்படும் இடம் குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அடையாளம் தெரியாத உடல்கள் மற்றும் உடல்பாகங்கள் ஒரே மயானத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.