சென்னை: வயநாடு நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பாதிப்பு குறித்து கேரள முதலமைச்சருடன் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் போனில் பேசினார். இதற்கிடையில் தமிழக மீட்பு படையினரும் கேரளா சென்று மீட்பு பணிகளை தொடங்கி உள்ளனர்.
கேரளாவில் தொடர்ந்து மழை கொட்டி வருவதால், மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக உள்ளது. மேலும் வயநாட்டில் ஏற்பட்டுள்ள அடுத்தடுத்த நிலச்சரிவுகளில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனுடன் போனில் பேசினார். அப்போது, மாநித்தின் வெள்ளப் பாதிவு மற்றும் நிலச்சரிவு குறித்து கேட்டறிந்ததுடன் கேரளாவுக்கு தேவையான உதவிகள் செய்ய தயாராக இருப்பதாக கூறினார்.
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி அருகே உள்ள மலைப்பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. முண்டக்காய் பகுதியில் பல வீடுகள், கடைகள், வாகனங்கள் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும், பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிக்கு செல்லும் பாலம் இடிந்து அடித்து செல்லப்பட்டுள்ளதால் மீட்பு பணிகளை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (KSDMA) தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ராணுவம் உள்பட தமிழக மீட்பு படையினர் என பல தரப்பினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 143 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நூற்றுக்கணக்கானோர் மீட்கப்பட்டு
கனமழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மலப்புரம், நீலம்பூர் வழியில் செல்லும் சாலியாறு ஆற்றில் பலர் அடித்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதனிடையே, பேரிடர் ஏற்பட்ட இடத்தில் தற்காலிக பாலம் கட்டவும், ஹெலிகாப்டர் மூலம் மக்களை வெளியேற்றவும், தேவையான ஏற்பாடுகளை செய்யவும் ராணுவத்தின் உதவி கோரப்படும் என முதல்வர் பினராயி விஜயன் உறுதியளித்துள்ளார்.
தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். நிலைமையை சமாளிக்க மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் உறுதியளித்தார். பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரும், வயநாடு முன்னாள் எம்.பி.யுமான ராகுல் காந்தியும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கண்ணூரில் இருந்து நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டிற்கு தேடுதல் மற்றும் மீட்பு பணியை மேற்கொள்வதற்காக ராணுவ வீரர்கள் குழு ஒன்று புறப்பட்டு சென்றது.
இந்த நிலையில், கேரளாவிற்கு முதற்கட்டமாக 5 கோடி ரூபாயை ஒதுக்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரளாவிற்கு எல்லா விதமான உதவிகளையும் தமிழ்நாடு அரசு உடனடியாக செய்யும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், தமிழ்நாடு அரசின் பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குழு மற்றும் மருத்துவக் குழுவினர் நேற்று இரவு புறப்பட்டு சென்ற நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு வயநாடு சென்றடைந்தனர்.
வயநாடு சென்ற தமிழ்நாடு அரசின் இரண்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கேரளா மாநில அரசின் மூத்த அதிகாரியுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து வயநாடு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இன்று முதல் மீட்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.