கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 63 பேர் பலியாகி உள்ளனர். இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக வயநாடு பகுதி பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. நிலச்சரிவில் இருந்து மக்களை மீட்க தமிழ்நாட்டில் இருந்து மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். கேரள அரசுக்கு உதவிடம் வகையில் இவர்கள் அங்கு சென்றுள்ளனர்.

வயநாடு பகுதியில் உள்ள மேப்பாடி, சூரல்மலை மற்றும் முண்டகை நகரில் ஏற்பட்ட நிலைச்சரிவு காரணமாக 500க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலச்சரிவில் இருந்து 63 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேப்பாடி சுகாதார நிலையத்தில் 35 உடல்களும், விம்ஸ் மருத்துவமனையில் 8 உடல்களும் உள்ளன. நிலம்பூர் பகுதி சாலியாரில் பல்வேறு இடங்களில் கரை ஒதுங்கிய 20 உடல்கள் நீலம்பூர் மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

70க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேநேரம் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் முண்டகைப் பகுதியில் முழுமையாக மீட்புப் பணிகளை ஆரம்பிக்க முடியவில்லை. NDRF இன் 5 பேர் கொண்ட சிறிய குழு மட்டுமே இதுவரை முண்டகையை அடைய முடிந்தது.

அங்கு நிலச்சரிவில் சிக்கித் தவித்தவர்களுக்கு NDRF குழுவினர் உணவு வழங்கினர். அதிகாரிகள் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கயிற்றால் ஆற்றைக் கடந்து மறுகரைக்கு வந்தனர். இங்கு ஏற்பட்ட பேரழிவின் அளவு இன்னும் வெளிவரவில்லை.

இதனிடையே மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளுக்கு உதவிட கேரளாவிற்கு சமீரன் மற்றும் ஜானி டாம் வர்கீஸ் ஆகிய இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையில் மீட்பு குழுவை அனுப்பியுள்ள தமிழ்நாடு அரசு முதற்கட்டமாக 5 கோடி ரூபாயை வழங்கியுள்ளது.

முன்னதாக கேரள வெள்ள பாதிப்புகள் குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை தொடர்புகொண்டு பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரளாவிற்கு எல்லா விதமான உதவிகளையும் தமிழ்நாடு அரசு உடனடியாக செய்யும் என்று உறுதியளித்தார்.

அதேவேளையில், மீட்புப் பணிக்காக கோழிக்கோட்டில் இருந்து 150 பேர் கொண்ட ராணுவக் குழு சூரல்மாலா சென்றடைந்தது. முண்டகைக்கு தாற்காலிக பாலம் அமைப்பதற்கான வாய்ப்புகளை தேடி வருகின்றனர்.

பெங்களூரில் இருந்து கண்ணூர் பாதுகாப்புப் படை மற்றும் ராணுவத்தின் மெட்ராஸ் இன்ஜினியரிங் குரூப் (எம்இஜி) ஆகியவற்றின் 160 பேர் கொண்ட குழுவும் வயநாடு செல்ல உள்ளது.

மீட்புப் பணிகளுக்கு ஆளில்லா விமானங்கள் மற்றும் போலீஸ் நாய்களைப் பயன்படுத்த அம்மாநில முதல்வர் பரிந்துரைத்தார். காவல்துறை ஆளில்லா விமானங்களை அனுப்பி சோதனை நடத்தவும் முதல்வர் உத்தரவிட்டார். மீட்புப் பணிகளுக்காக மோப்ப நாய்ப் பிரிவும் சம்பவ இடத்துக்கு வரவுள்ளது.

வயநாட்டில் மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க அமைச்சர்கள் குழுவை முதல்வர் பினராயி விஜயன் அமைத்துள்ளார், இவர்கள் தற்போது கோழிக்கோட்டில் முகாமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.