வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள முண்டகை பகுதிக்கு செல்ல சூரல்மலையில் இருந்து 190 அடி நீள பாலத்தை இந்திய ராணுவம் கட்டிமுடித்துள்ளது.
ராணுவ வழக்கப்படி கர்நாடகா & கேரளா துணைப் பகுதி தளபதி தனது ராணுவ வாகனத்தில் அந்தப் பாலத்தின் மீது சென்று அதை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
எஃகு கர்டர்கள் மற்றும் பேனல்களைக் கொண்டு சிறப்பு கருவிகளின் தேவையில்லாமல் இணைக்கப்படும் பெய்லி பாலம் பேரிடர் காலங்களில் ராணுவத்தால் போர்க்கால அடிப்படையில் அமைக்கப்படும்.
24 டன் எடையை தாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் நீளம் அதிகமாக இருப்பதால் ஆற்றின் நடுவே ஒரு தூணுடன் பாலம் கட்டப்பட்டுள்ளது,
டெல்லி மற்றும் பெங்களூரில் இருந்து கண்ணூர் விமான நிலையத்திற்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட இதன் உதிரிபாகங்கள் 17 லாரிகள் மூலம் சூரல்மலைக்கு கொண்டு வரப்பட்டது.
சூரல்மலைக்கும் முண்டகைக்கும் இடையிலான சாலை நிலச்சரிவால் துண்டிக்கப்பட்டதை அடுத்து மீட்புக் குழுவினர் அங்கு செல்லமுடியாமல் திணறிவந்தனர்.
https://x.com/wilson__thomas/status/1819008098859667677
இந்த நிலையில் ராணுவத்தின் உதவியுடன் அங்கு செல்ல பாலம் அமைக்கும் பணி நேற்று மாலை துவங்கியது. இரவு பகல் பாராமல் தொடர்ந்து பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட ராணுவத்தினர் இதனை 16 மணி நேரத்தில் அமைத்துள்ளனர்.
ராணுவ வழக்கப்படி படைப்பிரிவின் தளபதியின் வாகனம் முதலில் செல்ல வேண்டும் என்பதை அடுத்து கர்நாடகா & கேரளா துணைப் பகுதி, ஜெனரல் ஆபீசர் கமாண்டிங், மேஜர் ஜெனரல் வி.டி. மேத்யூ-வின் வாகனம் இந்த பாலத்தை முதலில் கடந்து சென்றது.
இதனையடுத்து முண்டகை பகுதிக்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர்.
நிலச்சரிவு ஏற்பட்டு மூன்று நாட்கள் ஆன நிலையில் யாரையும் உயிருடன் மீட்பது சாத்தியமில்லை என்று கேரள அரசு தெரிவித்த போதும் தேடுதல் பணியை அது தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.