சூரல்மாலா மற்றும் முண்டக்கை ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் கேரளாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, இறப்பு எண்ணிக்கை இப்போது 317 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 240 பேரைக் காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மழை காரணமாக நேற்று மாலை 4 மணிக்குப் பிறகு மீட்பு பணிகளை தொடரமுடியாமல் போன நிலையில் நான்காவது நாளாக இன்று மீட்பு பணி தொடர்ந்து வருகிறது.
சாலியாரில் இன்று அதிகாலை தொடங்கிய இந்த தேடுதல் முயற்சிகளுக்கு உதவ கூடுதல் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. முண்டக்கையில் 15 மண் அள்ளும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட பெய்லி பாலம் நிரந்தர பாலம் அமைக்கப்படும் வரை அப்படியே இருக்கும். சூரல்மாலா மற்றும் முண்டக்கை இடையே அமைக்கப்பட்டுள்ள இந்த பெய்லி பாலம் மீட்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்களை பேரிடர் பாதித்த பகுதிகளுக்கு கொண்டு செல்ல உதவிகரமாக உள்ளது.
மீட்பு நடவடிக்கைகளை முதல்வர் பின்ராயி விஜயன் தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில் வயநாடு சென்றுள்ள மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முண்டக்கையில் உள்ள வனத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மேப்படி கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களிடம் மீட்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.