வயநாடு: பெரும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு பகுதிக்கு எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி, தனது தங்கையும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா உடன் கேரள மாநிலம் கண்ணூர் விமான நிலையம் வந்தடைந்தார்.
தென்மேற்கு பருவமழை மற்றும் நிலச்சரிவால் கேரள மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தின் வயநாடு பகுதி நிலச்சரிவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு நிலச்சரிவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ள நிலையில், இதுவரை 287 பேர் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் 200க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டுக்கு, முன்னாள் வயநாடு தொகுதி எம்.பி.யும், தற்போதைய மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, தனது தங்கையான காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி ஆகியோா் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 10.30 மணியளவில் கேரளம் மாநிலம் கண்ணூர் விமான நிலையம் வந்தடைந்தனர். கண்ணூர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் வயநாடு புறப்பட்டு சென்றனர்.
வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளை பார்வையிடுவதுடன், மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுபவா்களுக்கு ஆறுதல் கூறுகின்றனா். மேலும், தற்காலிக முகாமாக செயல்படும் அரசுப் பள்ளிக்குச் சென்று பாதிக்கப்பட்டவா்களைச் சந்தித்து ஆறுதல் கூறுகின்றனர். மேலும் மேப்பாடி பகுதி மக்களை சந்தித்தும் ஆறுதல் கூறயுள்ளதாக காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன
. கடந்த மக்களவைத் தோ்தலில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி, கேரளத்தில் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற ராகுல் காந்தி, வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா். அங்கு இடைத்தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் பிரியங்கா போட்டியிடுவாா் என்று தகவல்கள் வெளியான நிலையில், பிரியங்காவும் ராகுலுடன் வயநாடுக்கு வந்துள்ளார்.