ராஞ்சி: ஜார்க்கண்டில் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று  43 தொகுதிகளில் வாங்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுபோல, பிரியங்கா காந்தி வத்ரா போட்டியிடும் வயநாடு தொகுதி இடைத்தேர்தல் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் 3 சட்டப்பேரவை தொகுதிகள் உள்பட  11 மாநிலங்களில் உள்ள 31 தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய  மாலை 5 மணி வரை  நடைபெற உள்ளது. வாக்குப்பதிவையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் அதிகாலை முதலே வாக்காளர்கள் சாரை சாரையாக வந்து தங்களது ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர்.

வயநாடு மக்களவை தொகுதி  இடைத்தேர்தல்:

கடந்த மக்களவைத் தேர்தலில் ரே பரேலி, வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்த நிலையில், அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அங்கு   காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து,   கேரளாவை ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) சார்பில் சத்யன் மோக்கேரியும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நவ்யா ஹரிதாஸும் போட்டியிடுகின்றனர்.

வயநாடு மக்களவைத் தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 71 ஆயிரத்து 742 வாக்காளர்கள் (14,71,742) இருக்கின்றனர். மூன்று பிரதானக் கட்சிகள் உள்பட 16 வேட்பாளர்கள் இந்த இடைத்தேர்தலில் களம்காண்கின்றனர். மொத்தம் 1,354 வாக்குச் சாவடிகள் மக்கள் வாக்களிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்:

கர்நாடகாவில் ஷிக்காவோன், சண்டூர், சென்னப்பட்டணா ஆகிய 3 பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. . சென்னப்பட்டணாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில், முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார். அங்கு காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல்:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு இரு கட்டங்களை தேர்தல் நடைபெறும் என தேர்தல் அறிவித்தது. அதன்படி இன்று முதல்கட்ட தேர்தல் 43 தொகுதிகளில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஹர்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில்  ஆளுநர் கங்வார் வாக்களித்தார், வாக்காளர்கள் அதிக அளவில் வருமாறு வேண்டுகோள் விடுத்தார்.

ஜார்கண்ட் மாநிலத்தில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ் அடங்கிய இண்டியா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜேஎம்எம் கட்சித் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக உள்ளார். இந்த சட்டப்பேரவையின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனால், அங்கு ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள இண்டியா கூட்டணியும், ஆட்சியை கைப்பற்ற பாஜக கூட்டணியும் முயற்சித்து வருகிறது.

இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 43 தொகுதிகளில் மொத்தம் 685 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில்,  மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும்.

நவம்பர் 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஜார்க்கண்டில் மொத்தம் 2.6 கோடி வேட்பாளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 1.31 கோடி பேர், பெண் வாக்காளர்கள் 1.29 கோடி பேர். 11.84 லட்சம் வாக்காளர்கள் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவுக்காக 15,344 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுஉள்ளன. இவற்றில் 12,716 வாக்குச்சாவடிகள் கிராமப்பகுதியிலும், 2,628 வாக்குச்சாவடிகள் நகரப் பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளன. 1,152 வாக்குச்சாவடிகளை முழுமையாக பெண்களே நிர்வகிப்பர் என்று மாநில தேர்தல் அதிகாரி கே.ரவிக்குமார் அறிவித்துள்ளார்.

செராய்கெல்லா தொகுதியில், ஜேஎம்எம் கட்சியிலிருந்து பாஜகவுக்குத் தாவிய மூத்த தலைவர் சம்பாயி சோரன் போட்டியிடுகிறார். இண்டியா கூட்டணிக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.