சென்னை: வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்.வேட்பாளர் பிரியங்கா காந்தி வெற்றிக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில்  தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு உள்ளதாக மாநில தலைவர்  செல்வபெருந்தகை கூறியுள்ளார்.

வயநாடு தொகுதியில் எம்.பி. பதவியை ராகுல்காந்தி  ராஜினாமா செய்த நிலையில், அங்கு மீண்ம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அங்கு  நவம்பர் 13-ல் வாக்குப்பதிவு  நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி வத்ரா வேட்பாளராக  களமிறக்கப்பட்டு உள்ளார். அவரை எதிர்த்து, பாஜக சார்பில் நவ்யா ஹாரிதாஸ், இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் சத்யன் மொக்கேரி ஆகியோர் களம் இறக்கப்பட்டு உள்ளனர். இதனால், அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில் முதன்முறையாக பிரியங்கா காந்தி போட்டியிடுவதால்,  இந்த தொகுதி நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,   பிரியங்கா வெற்றிக்காக  தமிழ்நாடு காங்கிரஸ்  சார்பில் தேர்தல் பணிக்குழு நியமனம் செய்து  செல்வப்பெருந்தகை அறிவித்து உள்ளார். அதன்படி, தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள்,  வாக்குப்பதிவு  இறுதி நாளான 11-ந்தேதி வரை  வயநாடு தொகுதியில் தேர்தல் பணியாற்றிட  உள்ளார்கள் என தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி வெற்றிக்காக தேர்தல் பணியாற்றிட எனது தலைமையில் முன்னாள் தலைவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 45 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நியமித்துள்ளோம்.

அடுத்த மாதம் 2-ந்தேதி முதல் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான 11-ந்தேதி மாலை வரை இந்த தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் வயநாடு தொகுதியில் தேர்தல் பணியாற்றிட உள்ளார்கள்.

எனது தேர்தல் பிரசாரம் வருகிற 2, 3 ஆகிய தேதிகளில் தொடங்கப்பட உள்ளது.

பாராளுமன்ற இடைத்தேர்தலில் பிரியங்காவின் வெற்றிக்கு பணியாற்றிட விருப்பம் உள்ள தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் கமிட்டியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், முன்னணி அமைப்புகள், இதர துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் தமிழக காங்கிரசால் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களோடு இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தேர்தல் பணியாற்ற விருப்பம் உள்ள நமது இயக்க நண்பர்கள் தங்களுடைய விருப்பத்தை தமிழக காங்கிரஸ் தலைமையகத்திற்கு தெரிவிக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.