சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து  தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து  கரையோர கிராமங்கள் மற்றும் அடையாறு கரையோர மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இன்று காலை முதற்கட்டமாக 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில்  கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.  இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நீர்நிலைகள் வேகவேகமாக நிரம்பி வருகின்றன. அதன்படி சென்னையின் புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள,  சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றும் ஏரிகளுக்கு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால், செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் முழு கொள்ளவை எட்டி வருகின்றன.

இதைத்தொடர்ந்து, நேற்று (12ந்தேதி) புழல் ஏரியில் இருந்து உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து, இன்று செம்பரம்பாக்கம் ஏரி விரைவில் முழு கொள்ளளவை எட்ட உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி 3645 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு கொண்டது. 3423 மில்லியன் கன அடி நீரை எட்டியுள்ளது. நேற்று காலை ஏரிக்கு நீர் வரத்து 713 கன அடியாக இருந்தது. தற்போது 6500 கன அடியாக உயர்ந்துள்ளது.

24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில்,  தற்போது 23.29 அடியை நீர்மட்டம் எட்டியுள்ள நிலையில் உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது. இன்று காலை 8 மணி முதல் வினாடிக்கு 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டு ள்ளதால் நீர் வளத்துறையால் அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் 6 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி,  சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எ அடையாறு கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர் வரத்தை பொறுத்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது