சென்னை: நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு  நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது.  இதையடுத்து ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் நீரும் அதிகரிக்கப்பட்டு உள்ளதால், ஆற்றின் கரையோரம் வசிக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்  ஏரிகளில் செம்பரம்பாக்கம் ஏரியும் ஒன்று. இது  25.51 சதுர கி.மீ பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துர் வட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24.00 அடியாகும். இதன் முழுக்கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும். இன்று காலை நீர் இருப்பு 22.76 அடியாகவும், கொள்ளளவு 3315 மில்லியன் கன அடியாகவும்  உயர்ந்துள்ளது.

சென்னை  மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முதல் மழை குறைந்தாலும்,  ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறந்த விடப்பட்டு வருகிறது.  நேற்று வினாடிக்கு 4500 கன அடி உபரி நீர்  அடையாற்றில் திறக்கப்பட்ட நிலையில், மேலும் இன்று பிற்பகல் 12.00 மணி அளவில் வினாடிக்கு 6,000 கன அடியாக உபரி நீர் வெளியேற்றும் பணி தெபாடங்கி உள்ளது.

அதுபோல, செங்குன்றம்  புழல் அருகே உள்ள  புழல் ஏரியிலும் இன்று காலை நீர் இருப்பு 19.72 அடியாகவும், கொள்ளளவு 2956 மில்லியன் கனஅடியாகவும் மற்றும் நீர் வரத்து வினாடிக்கு 709 கன அடியாகவும் உள்ளது. ஏரிக்கு  நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. எனவே அணையின் நீரினை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புழல் ஏரியின் மீகைநீர் கால்வாயின் வெள்ள தணிப்புக்காக ஏரியிலிருந்து நேற்று வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், மேலும் இன்று பிற்பகல் வினாடிக்கு 1,000 கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக,   நீர்வளத்துறை அதிகாரிகள், செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் புழல் ஏரி தண்ணீர் திறக்கப்படுவதால் ஆற்றங்கரையோரம் வசிக்கக்கூடிய மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், அரசு அமைத்துள்ள தற்காலிக முகாம்களில் தங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.