திருவள்ளூர்: செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் மற்றும் வீராணம் ஏரிகளில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியானது 25.51 சதுர கி.மீ பரப்பளவில் குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும். வியாழக்கிழமை (டிச.12) நீர் இருப்பு 21.90 அடியாகவும், கொள்ளளவு 3,110 மில்லியன் கன அடியாகவும் இருந்த நிலையில், தற்போது ஏரிக்கு நீர் வரத்து 6,500 கன அடியாகவும், நீர்மட்டம் 23.29 அடியாக உயர்ந்துள்ளது.

தற்போது ஏரிக்கு வரும் நீர் வரத்தினால் 22 அடியை எட்டுவதாலும், ஏரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருவதால் வெள்ளநீர் வரத்து காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெள்ளிக்கிழமை காலை (டிச.13) 8 மணியளவில் வினாடிக்கு வெள்ளநீர் போக்கி வழியாக 1000 கனஅடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. எனவே, ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு முதற்கட்ட வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரி அதன் முழுக் கொள்ளளவை எட்டியதை அடுத்து ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு வினாடிக்கு 500 கன அடியாக திறக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் 20.86 சதுர கி.மீ பரப்பளவில் புழல் ஏரி அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 21.20 அடியாகும். இதன் முழுக்கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடியாகும்.

இன்று  (டிச.13) காலை 6 மணி நிலவரப்படி நீர் இருப்பு 19.69 அடியாகவும், கொள்ளளவு 2950 மில்லியன் கனஅடியாகவும் மற்றும் நீர் வரத்து வினாடிக்கு 2281 கன அடியாகவும் உள்ளது. ஏரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. எனவே அணையின் நீரினை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புழல் ஏரியின் மீகைநீர் கால்வாயின் வெள்ள தணிப்புக்காக ஏரியிலிருந்து வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் வினாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.  ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகபடியாகும் நிலையில் கூடுதல் உபரிநீர் படிப்படியாக திறக்கப்படும் என முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, புழல் ஏரியின் நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான நாரவாரிக்குப்பம், வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், மணலி மற்றும் சடையான்குப்பம் ஆகிய பகுதிகளில் கால்வாயின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பூண்டி அணையின் நீர்மட்டம் 34.05 அடியை எட்டிய நிலையில் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் மொத்த உயரம் 35 அடியாக உள்ள நிலையில் நீர்மட்டம் 34.05 அடியை எட்டியதைத் தொடர்ந்து நேற்று மதியம் அணையில் இருந்து 1000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. பின்னர் நீர் திறப்பு 5000 கனஅடி வரை அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில், பூண்டி ஏரியில் இருந்து  நீர்திறப்பு 12,000 கனஅடியில் இருந்து 16,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர்தேக்கத்திற்கு நீர்வரத்து 10,000 கனஅடியில் இருந்து 15,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில், தொடரும் கனமழையால், வீராணம் ஏரியில், நீர் திறப்பு, இரண்டாயிரத்து இருநூறு கன அடியாக, உயர்த்தப்பட்டிருக்கிறது.  கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் வீராணம் ஏரியில் நீர் திறப்பு 2,200 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. வீராணம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,028 கன அடியாக உள்ள நிலையில் ஏரியின் பாதுகாப்பு கருதி நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டுள்ளது.