சேலம்: நடப்பாண்டு 7வது முறையாக முழு கொள்அளவை எட்டியுள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 6வது நாளாக 120 அடியாக தொடர்கிறது. இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் டெல்டா மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அதுபோல காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை கொட்டுகிறது. இதனால், கர்நாடக மாநில அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளதால், காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக, மேட்டூர் அணை கடந்த வாரம் 7வது முறையாக முழு கொள்அளவான 120 அடியை எட்டியுள்ளது.
தற்போதைய நிலையில், காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை வினாடிக்கு 65,000 கனஅடியாக வந்துகொண்டிருக்கிறது. அதபோல மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22,300 கனஅடி வீதமும், உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 42,700 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கான நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், வெள்ளக் கட்டுப்பாட்டு மையத்தில் 24 மணி நேரமும் நீரின் அளவை அதிகாரிகள் கண்காணித்தும், தேவைக்கேற்ப வெளியேற்றியும் வருகின்றனர்.
காவிரிக் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
அணையிலிருந்து 65,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் காவிரிக் கரையோர மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், வருவாய், தீயணைப்பு, நீர்வளம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், காவிரிக் கரையோரப் பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விநாடிக்கு 65,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால், காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள 7 கதவணைகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அணை மற்றும் சுரங்க மின் நிலையத்தில் மட்டுமே 250 மெகாவாட் மின் உற்பத்தி நடக்கிறது என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை விநாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 50 ஆயிரம் கனஅடியாகவும், இன்று காலை 4 மணியளவில் 57 ஆயிரம் கனஅடியாகவும், மதியம் 12 மணியளவில் 65 ஆயிரம் கனஅடியாகவும் படிப்படியாக உயர்ந்தது. வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கல் ஆறு மற்றும் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்த தடை தொடர்கிறது. காவிரிக் கரையோர பகுதிகளை வருவாய், வனம் உள்ளிட்ட துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
7வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை – வைகை அணையும் நிரம்பியது! விவசாயிகள் மகிழ்ச்சி…
[youtube-feed feed=1]