கடந்தவாரம் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததை உறுதி செய்ததாக பார்த்தோமில்லையா? அது என்னவெனில் செவ்வாயில் தரையிறங்கிய ஃபீனிக்ஸ் கலம் எடுத்தனுப்பியிருக்கும் படத்தைப் பார்க்கையில் செவ்வாயில் பனிக்கட்டி இருப்பது உறுதியாயிருக்கின்றது. இதன் மூலம் நீர் மூலக்கூறுகள் இருக்கும் சாத்தியமும், நுண்ணுயிரிகள் வாழும் சாத்தியமும் இருக்கின்றது.
இதோ படம்
செவ்வாய்க்கிரகத்தை சென்றடைந்துள்ள “பீனிக்ஸ்’ விண்கலத்தால் அனுப்பிவைக்கப்பட்ட புதிய புகைப்படங்களானது, அக்கிரகத்தின் மேற்பரப்பின் சற்றுக் கீழே பாரிய பனிப்பாறை இருப்பதற்கான சாத்தியப்பாட்டை நிரூபிப்பதாக உள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பீனிக்ஸ் அதுமட்டும் ஆய்வுசெய்யவில்லை, செவ்வாய் மண்ணையும் ஆய்வு செய்கிறது.
கீழே கிடக்கும் செவ்வாய் கிரக மண்ணை தன்னிடம் இருக்கும் TEGA (Thermal and Evolved Gas Analyzer) ஓவனில் போட வேண்டும். பல நாட்களுக்கு 1000 டிகிரி செல்சியஸுக்கு வெப்பத்தை உயர்த்த வேண்டும். எந்த நிலையில் மண் ஆவியாகின்றது என்று காண வேண்டும். கடைசியில் அதன் மணம் நமக்குத் தெரிய வரும். இன்னும் சில நாட்களில் அவற்றின் தரவுகள் நமக்கு வர ஆரம்பிக்கப் போகின்றது.
இத்தனையும் அங்கே மனிதன் வாழும் சாத்தியக் கூறு இருக்கின்றதா என்பதைக் காணும் முயற்சியாகும்.
இதோ மண்ணை அள்ளும் பீனிக்ஸ்
செவ்வாய் கிரகத்தில் பனிக்கட்டி இருப்பதை எவ்வாறு நிரூபிப்பது என்று விஞ்ஞானிகள் மண்டையைப் பிய்த்துக் கொண்டு இருக்கையில், இப்போது பனிக்கட்டி தானே முன்வந்து தான் பனிக்கட்டி தான் என்று நிரூபித்துள்ளது. 🙂
செவ்வாயின் ஒரு நாள் என்பது புவியின் ஒரு நாளை விட 39 நிமிடங்கள் அதிகமாகும்.
அங்கு சென்று செவ்வாய் நாளான சோல் (Sol) 20ம் தேதியும் (புவியில் ஜூன் 15) சோல் 24 (ஜூன் 18) ம் தேதியும் ஒரே இடத்தை எடுத்த இரண்டு புகைப்படங்கள் செவ்வாயில் பனிக்கட்டி இருப்பதை நிரூபித்ததைக் கண்டு விஞ்ஞானிகள் மெய் மறந்துவிட்டனர்.
ஆம், வெள்ளை நிறத்தில் இருப்பது ஏன் உப்பாக இருக்கக் கூடாது என்று குதர்க்கமாகக் கேள்வி கேட்பதற்குள், நான்கே நாளில் சூரியனின் வெப்பத்தில் ஆவியாகி உப்பு இப்படியா கரைந்து மாயமாக மறைந்து போகும்? என்று பதில் சொல்லியிருக்கின்றது செவ்வாய்ப்பனி.
ஆனால் என்ன பிரச்னை என்னவெனில் வட்டமிட்டுக் காட்டப்பட்டிருக்கும் இடத்தில் இருக்கும் ஐஸ் கற்கள் நான்கே நாட்களில் மாயமாகிவிட்டதன் மர்மம் என்ன?! பனிக்கட்டி தான் என்கின்றார்கள் விஞ்ஞானிகள்.
இரத்தினகிரி சுப்பையா