ரோடா

ர்தார் சரோவர் அணையில் இருந்து விவசாயத்துக்காக நர்மதா நதி நீர் திறக்கப்படுவதை குஜராத் அரசு நிறுத்தி உள்ளது.

குஜராத் மாநிலத்தின் முக்கிய நீர் ஆதாரங்களில் நர்மதா நதி நீரும் ஒன்றாகும்.   இந்த நதியில் கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணையில் இருந்து குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளுக்கு விவசாயம் மற்றும் குடிநீருக்காக நீர் திறந்து விடப்படுகிறது.   கடந்த வருடம் டிசம்பர் மாதம் இந்த அணையில் சுமார் 124.02 மீட்டர் உயரத்துக்கு நீர் இருந்தது.   தற்போது அணையில் 105.5 மீட்டர் உயரத்தில் நீர் உள்ளது.

இது மிகவும் குறைந்த அளவு என்பதால் தற்போது விவசாயத்துக்கு திறந்து விடப்படும் நதி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.   தற்போதுள்ள நீர் வரும் கோடை காலத்தில் குடிநீர் தேவைக்கு மட்டுமே போதுமானதாக உள்ளதால் நிறுத்தப் பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து குஜராத் அரசு வெளியிட்ட அறிவிப்பில், “சர்தார் சரோவர் அணையில் வெகுவாக நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயப்பணிகளுக்காக மார்ச் மாதம் 15ஆம் தேதிக்கு பிறகு நீர் திறப்பது நிறுத்தப்படும்.   மேலும் நர்மதா நதி நீரை மட்டும் பாசனத்துக்கு நம்பி இருக்கும் விவசாயிகள் கோடைக் கால பயிர் எதுவும் பயிரிட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.  தற்போதுள்ள நீர் குடிநீருக்காக தேவைப்படுவதால் நதி நீர் திறப்பு நிறுத்தப் படுகிறது”  என கூறப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த தேர்தலின் போது விவசாயத்துக்கான நீர் வரத்து தடையின்றி வழங்கப்படும் என ஆளும் பாஜக அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.