சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்க சேவையை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ரூ.3,770 கோடி மதிப்பீட்டில் வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை 9.05 கீ.மீ.க்கு மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டம் உள்ளது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைக்க, ரயிலை பெண் ஓட்டுனர் ரீனா இயக்கினார். சென்னை கடற்கரை-அத்திப்பட்டு இடையே 4-வது அகல ரயில் பாதையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ரூ. 293.40 கோடியில் கடற்கரை-அத்திப்பட்டு இடையே 4-வது அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து, மயிலாடுதுறை-திருவாரூர் இடையே ஒற்றை வழி ரயில்பாதையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ரூ.423 கோடி மதிப்பில் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையான விழுப்புரம்-மயிலாடுதுறை – தஞ்சாவூர் இடையேயான ரயில் பாதையை நாட்டுக்கு அர்பணித்தார்.

ரூ.2,640 கோடியில் கல்லணை கால்வாய் புனரமைப்பது நவீனப்படுத்தும் திட்டத்திற்கும், ரூ.1000 கோடியில் சென்னை தையூரில் ஐஐடி சார்பில் அமைக்கப்படும் டிஸ்கவரி வளாகத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.