லக்னோ: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள ஹத்ராஸ் தலித்பெண் உயிரிழந்த விவகாரத்தில், தினசரி புதுப்புதுப் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது, அந்த இளம்பெண் பெற்றோரால் கவுரவ கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது, இந்த சம்பவத்தில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
உ.பி. மாநிலம் ஹத்ராஸ் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், கடந்த 14ம் தேதி, 4 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண்ணின் பெற்றோர் மற்றும் குடும்பத்தார் அந்த உடலை தங்களிடம் தந்து விடுமாறும், தங்கள் முறைப்படி தகனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் காவல் துறையை கேட்டுக் கொண்டும் அவர்கள் அதற்கு அனுமதி வழங்க வில்லை. உடல் எரிக்கப்பட்டதால், மறுபிரேத பரிசோதனை செய்வது உள்ளிட்ட விஷயங்களில் ஈடுபட முடியாமல் தடயம் அழிந்துவிடும் என்றும், காவல்துறை யினர் திட்டமிட்டே உடலை எரித்துவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஹத்ராஸ் விவகாரம், மீண்டுமொரு நிர்பயா என்று பரபரப்பான விவாதங்கள் நடைபெற்றன. இந்த விவகாரத்தில், ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி தலையிட்டது, நாடு முழுவதும் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர்கள் உ.பி. மாநிலம் சென்று இறந்த பெண்ணின் பெற்றோரை சந்திக்க முயன்றபோது, அவங்ரகளை உ.பி. மாநில காவல்துறை தடுத்த விவகாரமும் பூதாகாரமாக்கப்பட்டு, பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மாநில அரசு, விசாரணை கமிஷன் அமைத்துள்ளது மட்டுமின்றி, சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட்டு உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, சந்தீப் சிங், ராமு சிங், ரவி சிங் மற்றும் லவ்குஷ் சிங் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையில் உயிரிழந்த இளம்பெண்ணின் உடற்கூறாய்வு அறிக்கை மற்றும் தடயவியல் அறிக்கையும் வெளியானது. அதில், அந்த இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதற்கான அறிகுறி இல்லை என்றும், அவர் கடுமையாக தாக்கப்பட்டு இருந்தார், அவரது முதுகு, கழுத்து என பல இடங்களில் கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் தெரிவித்து உள்ளன.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும் என பெண்கள் அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
அதுபோல, உயிரிழந்த இளம்பெண்ணின் பெற்றோரிடம், உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால், அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாயின.
இந்த வழக்கின் உச்சநீதிமன்ற விசாரணையின்போது, உ.பி. அரசு அளித்த பதிலில், பெண் உடலை கிராமத்தில் வைத்திருந்தால் மறுநாள் வன்முறைச் சம்பவங்கள் நிகழும் வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை கொடுத்த தகவலையடுத்துதான் அதிகாலையில் உடல் எரிக்கப்பட்டது. மேற்கொண்டு வன்முறை சூழல் ஏற்படாமல் இருக்க அந்த பெண்ணின் உடலை எரிக்க அவரது குடும்பத்தார் ஒப்புக்கொண்டனர். சட்டம்-ஒழுங்கு அமைதியை கருத்தில் கொண்டுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டதே தவிர பின்னணியில் வேறு திட்டம் எதுவும் கிடையாது. ஏற்கனவே அந்த உடல் முழுமையாக பிரேத பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டது என்று தெரிவித்துஉள்ளது.
இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தை சேர்ந்த பாஜக தலைவர் ரஞ்சித் பகதூர் ஸ்ரீவத்சவா என்பவர், புதியதாக ஒரு தகவலை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில், குற்றம்சாட்டப்பட்ட ஆண் நபரில் ஒருவருடன் இளம்பெண் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்த விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்து அவர்களை அந்த இளம்பெண்ணை கொன்றிருக்கலாம் என்று கொளுத்தி போட்டுள்ளார். மேலும், இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது என்பதை உறுதிபடுத்த நேரில் பார்த்தவர்கள் யாரும் இல்லை. மேலும், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை குற்றம்சாட்டப்பட்ட இளைஞர்கள் கடத்தி சென்றதற்கான நேரடி ஆதாரங்களும் இல்லை என்று தெரிவித்து உள்ளார். ஸ்ரீவத்சா மீது 44 வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. உயிரிழந்த இளம்பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுபவரும், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருமான, றையில் இருந்தபடியே சந்திப் சிங் தாக்கூர் என்பவர் சிறையில் இருந்தபடி காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அநத கடிதத்தில், நானும், உயிரிழந்த இளம்பெண்ணும் நண்பர்கள். நேரில் சந்தித்து கொள்வது மட்டுமல்லாமல், தொலைபேசி மூலமும் தினமும் பேசிக்கொள்வோம்.
எங்களது நட்பு, அவரின் குடும்பத்திற்கு பிடிக்கவில்லை. இளம்பெண் கொல்லப்பட்ட நாளன்று, வயலில் இருந்த அவரை சந்திக்க சென்றேன். அப்போது அவரது தாயாரும், சகோதரரும் அங்கு இருந்தனர். இதனால், என்னை திரும்பி செல்லும்படி அவர் கூறியதால், திரும்பி வந்துவிட்டேன்.
பின்னர், அன்று, அவர் வீட்டில் கால்நடைகளுக்கு தீணி வைக்கும் சமயத்தில், அவரது தாயாரும், சகோதரரும், இளம்பெண்ணை கடுமையாக தாக்கியதாகவும், அதில் அவர் படுகாயமடைந்ததாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். இதன் காரணமாகவே அவர் உயிரிழந்திருக்ககூடும். நான் இதுவரை அந்த பெண்ணை அடித்தது கிடையாது, மேலும் தவறாக நடந்துகொண்டதும் இல்லை. இந்த விவகாரத்தில், இளம்பெண்ணின் தாயாரும், சகோதரரும் தவறாக எங்கள் மீது தவறாக குற்றம் சுமத்தி சிறைக்கு அனுப்பியுள்ளார். இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தி எங்களுக்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும் என எழுதி உள்ளார்.
இந்த விவகாரத்தில், சாட்சிகளைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அக்டோபர் 8 ம் தேதிக்குள் தெரிவிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரபிரதேச அரசுக்கு உத்தரவிட்டது. இது தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் ஒரு வழக்கறிஞரைத் தேர்ந்தெடுத்துள்ளார்களா என்றும் கண்டறியவும் உயர் நீதிமன்றம் உ.பி. அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக, யோகி அரசை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.
தற்போது இந்த விவகாரம் கவுரவகொலை என்ற விதமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. உயர்ஜாதியை சேர்ந்த இளைஞரை காதலித்ததால், இளம்பெண் பெற்றோர்களாலேயே அடித்து கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஹத்ராஸ் சம்பவத்தில் தினசரி வெவ்வேறு தகவல்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது வழக்கின் போக்கையே மாற்றி விடும் என சமூக ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.