லக்னோ:

மோடியின் காவலாளி என்ற பதிவுக்கு நாடு முழுவதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தேநீர் விற்பனையாளர், காவலாளியாக மாறியதுதான் இந்தியாவின் மாற்றமா? என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கேள்வி எழுப்பி உள்ளார்.

பாஜக ஆட்சியில்  இந்தியா மாறுகிறது என்று பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். இதுகுறித்து கூறிய மாயாவதி,  கடந்த 2014 தேர்தலில் தேநீர் விற்பனையாளராக இருந்த பிரதமர் நரேந்திர மோடி, 2019 தேர்தலில் காவலாளியாக மாறிவிட்டார், இதைத்தான் அவர்கள் இந்தியா மாறுகிறது என்று கூறுகிறார்களா என்று நக்கல் செய்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு டிவிட்டரில்  பதிவிட்ட பிரதமர் மோடி,  நான் தனி ஆள் இல்லை. ஊழலை, சமூக கொடுமைகளை எதிர்ப்பவர்கள் அனைவரும் நாட்டின் காவலாளிகள். நானும்கூட நாட்டின் காவலாளிதான் என்று இந்தியர்கள் அனைவரும் கூறி வருகின்றனர் என்றும், பாஜகவினர் தங்களது பெயருக்கு முன்னாள் காவலாளி என்பதை குறிக்கும் சவுகிதார் என்பதை சேர்த்துக் கொள்ளுங்கள் என்றும்  தெரிவித்திருந்தார்.

பிரதமரின் இந்த டிவிட் குறித்து அரசியல் கட்சியினர் மட்டுமின்றி  சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து , பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தேநீர் விற்பனையாளராக இருந்த மோடி தற்போது  காவலாளியாக மாறிவிட்டார். பாஜக ஆட்சியில் இந்தியா மாறுகிறது என்று கூறுவது இதைத்தானா? இந்த மாற்றம் பிரமிப்பாக இருக்கிறது என்று நக்கல் செய்துள்ளார்.