சென்னை: இன்று மாலை போர்க்கால ஒத்திகை சென்னை உள்பட 4 பகுதிகளில் நடைபெற உள்ள நிலையில், போர்க்கால ஒத்திகை குறித்து பொதுமக்கள் அச்சமோ, பதற்றமோ அடைய தேவை இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இந்தியா இறங்கி உள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்று மாலை நாடு முழுவதும் போர் ஒத்திகை நடைபெறுகிறது.
இந்த நிலையில், பொதுமக்கள் பதற்றம் அடைய தேவை இல்லை என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுரையின்படி, சென்னை துறைமுகம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஒருங்கிணைந்த சிவில் பாதுகாப்பு பயிற்சியை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஒத்திகை இன்று (புதன்கிழமை) மாலை 4 மணி முதல் 4.30 மணிவரை நடைபெறும்.
இதில் முக்கியமாக 2 விதமான விஷயங்கள் கையாளப்பட உள்ளன. வான்வழி தாக்குதல் நடைபெறும் சூழ்நிலை மற்றும் எந்தவிதமான அவசர காலம் ஆகிய காலகட்டங்களில் தயார் நிலையை உடனடியாக மேற்கொள்வதற்கான ஆய்வு மேற்கொள்ளப்படும்.தமிழகத்தில் மாநில அவசரகால இயக்க மையம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் இருந்து இந்த மையம் செயல்படும்.
இந்த ஒத்திகை பயிற்சியின்போது மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான மாவட்ட பேரியர் மேலாண்மை அலுவலகம், சிவில் பாதுகாப்பு அதிகாரிகளான ஊர்க்காவல் படை, தீயணைப்புத்துறை மற்றும் தொடர்புடைய பிற துறைகளின் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.இந்த ஒத்திகை தொடர்பாக, சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமைச்செயலாளரின் தலைமையில், மாநில மற்றும் மத்திய அரசுத் துறைகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் உள்துறை கூடுதல் தலைமைச்செயலாளர், வருவாய்த்துறை கூடுதல் தலைமைச்செயலாளர், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர், போலீஸ் டி.ஜி.பி., கூடுதல் டி.ஜி.பி. (செயலாக்கம்), கல்பாக்கம் அணு மின் நிலைய திட்ட இயக்குனர், சென்னை துறைமுக தலைவர், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த பொதுமக்கள் பாதுகாப்பு ஒத்திகை என்பது தயார் நிலையை சோதிப்பதற்கான ஒத்திகை தான். அவசரநிலை சந்திப்பதில் தயாராக உள்ளதா? என்பதை சோதிக்க மட்டுமே இது நடத்தப்படுகிறது. மற்ற இடங்களில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் வழக்கம்போல இயங்கும். பொதுமக்கள் இதைப்பற்றி எந்தவிதமான பதற்றமோ, அச்சமோ அடையத் தேவையில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel