பாட்னா: தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் 10 மாநிலங்களில் செயல்பட்டுவரும் மீன் பண்ணைகளில், சுகாதாரம் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்று தெரிவித்துள்ள ஆய்வுக் குழுவினர், அவற்றால் நோய் பரவலாம் என்றும் எச்சரித்துள்ளனர்.
தமிழ்நாடு, பீஹார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், அசாம் உட்பட 10 மாநிலங்களில் ஏராளமான மீன் மற்றும் இறால் பண்ணைகள் செயல்படுகின்றன. இவற்றில், 250 பண்ணைகளில் இந்திய விலங்குகள் பாதுகாப்பு கூட்டமைப்பினர் சமீபத்தில் ஆய்வு நடத்தினர். ஆனால், இதன் முடிவுகள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.
இந்தப் பண்ணைகளில் முறையான சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றாததால், அங்கிருந்து விற்பனைக்கு வரும் மீன் மற்றும் இறால் ஆகியவை, மக்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதாக உள்ளன.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; இம்மாநிலங்களில், நன்னீர் மற்றும் கடல் நீரைப் பயன்படுத்தி, மீன் மற்றும் இறால் வளர்க்கும் பண்ணைகள் உள்ளன. இவற்றில் பல பண்ணைகள், விதிமுறைகளை பின்பற்றாமல் சுகாதாரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளன. இப்பண்ணைகளில் இருந்து, கழிவுகளை முறையாக வெளியேற்றுவதில்லை.
அங்கிருந்து வெளியேறும் கழிவு நீர், நிலத்தடி நீருடன் சேர்வதால், அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். பீகாரின் பாட்னா உள்ளிட்ட நகரங்களின், 20 பண்ணைகள் நச்சுத்தன்மையுடன் உள்ளன. இது பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். பல பண்ணைகளில் கழிவு நீரை வெளியேற்றாமல், மீண்டும் அதிலேயே மீன்களை வளர்க்க பயன்படுத்துகின்றனர்.
இதனால், மீன்களின் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள், அவற்றை உண்போருக்கும் எதிரொலிக்கும். இதுபோன்ற சுகாதாரமற்ற பண்ணைகளில் வளர்க்கப்படும் மீன் மற்றும் இறால்கள், மக்களுக்கு பல்வேறு நோய்களை உருவாக்கும். இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.