வாரங்கல்: தெலுங்கானாவில் 3 வயது சிறுவன் உள்பட 9 பேரை கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
வாரங்கல் மாவட்டத்தில் கோரே குந்தா கிராமத்தில் 3 வயது சிறுவன் உள்பட 9 பேர் கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வழக்கில் பீகாரைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளி சஞ்சய் குமார் யாதவ் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக சஞ்சய் குமார் யாதவ், ரபிகா என்ற பெண்ணை ரயிலில் இருந்து தள்ளி கொலை செய்துள்ளார். அவரின் 16 வயது மகளை சஞ்சய் காதலித்ததாகவும், அதற்கு ரபிகா எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
ரபிகா கொலை தொடர்பாக தனி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் நடைபெற்று வரும் நிலையில், அந்த கொலையை மறைக்க மேலும் 9 பேரை சஞ்சய் கொலை செய்து கிணற்றில் வீசியதாக காவல் துறையினர் கூறினர். இந்த வழக்கில் மாவட்ட நீதிபதி கே.ஜெய குமார், குற்றம்சாட்டப்பட்ட சஞ்சய் யாதவுக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கி உள்ளார்.