தாய்லாந்து – கம்போடியா இடையே எல்லை பிரச்சனை பல ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில் இன்று இருநாடுகளுக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது.

இந்த மோதலில் தாய்லாந்தைச் சேர்ந்த 11 பொதுமக்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது, அதேவேளையில் இந்த மோதலின் போது தாய்லாந்து F-16 ரக போர் விமானங்களைப் பயன்படுத்தியதாக கம்போடியா குற்றம்சாட்டியுள்ளது.

காலனியாதிக்க காலம் முதல் நடைபெற்று வரும் இந்த மோதலின் மையப்புள்ளியாக பிரீயா விஹார் என்ற இந்து கோயில் இருந்து வருகிறது.

இந்த கோயில் யாருக்கு சொந்தம் என்பதில் இருநாடுகளுக்கும் இடையே எழுந்த பிரச்சனையில் 1962ம் ஆண்டு சர்வதேச நீதிமன்றம் கம்போடியாவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.

இதையடுத்து சிலகாலம் இருநாடுகளும் அமைதியாக இருந்த நிலையில் 2008ம் ஆண்டு இந்த கோயிலை யுனெஸ்கோ சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கம்போடியா வலியுறுத்தியது.

இதைத் தொடர்ந்து 2011ம் ஆண்டு இரு நாடுகளும் மீண்டும் சர்வதேச நீதிமன்றத்தை அணுகிய நிலையில் இம்முறையும் கம்போடியாவுக்கு ஆதரவாக தீர்ப்பளிக்கப்பட்டது.

எல்லை பிரச்சனையில் இரு நாடுகளும் தொடர்ந்து பிடிவாதம் பிடித்துவந்து நிலையில் இன்று இரு நாட்டு ராணுவ வீரர்களும் சண்டையிட்டுக்கொண்டனர்.

இதையடுத்து தாய்லாந்து எல்லையில் வசிக்கும் சுமார் 40000 பொதுமக்கள் வெளியேற்றப்பட்டதை அடுத்து இருநாடுகளும் போரில் ஈடுபடக் கூடும் என்று கூறப்படுகிறது.

அதேவேளையில், இந்தப் போரையும் நிறுத்தி தாய்லாந்து – கம்போடியா இடையே எல்லைப் பிரச்சனையை தீர்க்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.