மதுரை: தமிழகத்தில் வக்பு வாரியம் செயல்பாட்டில், இல்லை, அது  கலைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் புதிய வக்பு வாரியம் அமைக்கப்படும் என்றும் உயர் நீதிமன்றத்தில்  தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

 மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த டி.எஸ்.அகமது இப்ராகிம் என்பவர் வக்பு வாரியம் குறித்து உயர் நீதிமன்ற மதுரையில் தாக்கல் செய்த மனுவில்,  தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்களின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாகும். இந்தக் காலம் கடந்த 2-ம் தேதியுடன் முடிந்துவிட்டது. இந்நிலையில், வக்பு வாரியத்தின் பதவிக் காலத்தை 3 மாதங்கள் நீட்டித்து தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நலத்துறை முதன்மைச் செயலர் 29.8.2025-ல் அரசாணை பிறப்பித்துள்ளார்.

மத்திய அரசின் வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்தபோது, வக்பு வாரியத்தில் எந்த நியமனமும் நடைபெறாது என மத்திய அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. எனினும், தமிழ்நாடு வக்பு வாரியத்தின் பதவிக் காலம் நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

வக்பு வாரிய சட்டத் திருத்தப்படி, வாரியத்தில் தேர்ந்தெடுக் கப்பட்ட உறுப்பினர்கள் பதவியில் தொடரலாம். தேர்வு செய்யப்படாமல் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியில் தொடர முடியாது. நியமன உறுப்பினர்கள் வக்பு நடவடிக்கையில் தொடர்வது சட்டவிரோதம். எனவே, வக்பு வாரியத்தில் தேர்வு செய்யப்படாத உறுப்பினர்களின் பதவிக் காலத்தை நீட்டித்து பிறப்பித்த அரசாணையை செல்லாது என அறிவித்தும், தேர்ந் தெடுக்கப்படாத உறுப்பினர்கள் வக்பு வாரிய நடவடிக்கையில் பங்கேற்கத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  ‘‘வக்பு வாரிய சட்டத்திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்ற வழக்கில் முடிவு வரும் வரை 3 மாதங்களுக்கு வக்பு வாரிய உறுப்பினர்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. தற்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதனால் தற்போது வக்பு வாரியம் செயல்பாட்டில் இல்லை. விரைவில் புதிதாக வக்பு வாரியம் அமைக்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, “வக்பு வாரிய திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால், தமிழகத்தில் வக்பு வாரியம் செயல் பாட்டில் இல்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரும் அரசாணை தற்போது செயல்பாட்டில் இல்லை. எனவே மனு முடிக்கப் படுகிறது’’ என உத்தரவிட்டார்.