அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் எங்களுக்கு ராமர்கோவில்தான் வேண்டும் மத்திய சுற்றுலா துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறுவது போல ராமர் மியூசியம் அல்ல. இது லாலிபாப் கொடுத்து குழந்தைகளை ஏமாற்றுவது போன்றது என்று பாஜக தலைவர் வினய் கட்டியார் தெரிவித்துள்ளார்.
மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் சுற்றுலா துறை அமைச்சர் மகேஷ் சர்மா சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமியில் 225 கோடி செலவில் ராம் மியூசியம் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இது இப்பகுதியில் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதோடு மட்டுமன்றி இளைய தலைமுறையினர் இராமாயணம் போன்ற இதிகாசங்களை அறிய வாய்ப்பாகவும் அமையும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்த திட்டத்துக்கு பாஜக தரப்பிலிருந்தே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாஜக தலைவர் வினய் கட்டியார் இது குறித்து கூறும்போது, எங்களுக்கு தேவை ராமர் கோவில்தான், மியூசியம் அல்ல. இது குழந்தைகளுக்கு லாலிபாப் கொடுத்து ஏமாற்றுவதுபோல இருக்கிறது. நாங்கள் ஒவ்வொரு முறை ராம ஜென்ம பூமிக்கு போகும்போதும் அங்குள்ள சாதுக்கள் “எப்போது ராமர் கோவில் கட்டுவீர்கள்?” என்று கேட்ட வண்ணம் இருக்கிறார்கள். எங்களுக்கு ராமர் கோவில் மட்டுமே வேண்டும் வேறு எதுவும் வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.