டில்லி

வால்மார்ட் நிறுவனம் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை வாங்குவதால் இந்தியாவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என வால்மார்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்திய ஆன்லைன் வர்ததகத்தில் பெரும் புகழுடனுள்ளது ஃப்ளிப்கார்ட் நிறுவனம்.   இந்த நிறுவனத்தின் 77% பங்குகளை அமெரிக்காவின் சில்லரை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் வாங்கி உள்ளது.   இதற்காக வால்மார்ட் ரூ.1லட்சத்து 7 ஆயிரத்து 200 கோடி க்கு  ஒப்பந்தம் போட்டுள்ளது.   அமெரிக்க டாலர் மதிப்பில் இது $16 பில்லியன் ஆகிறது.

இந்த பேரத்தின் மூலம் பின்புற வாசல் வழியாக இந்தியாவுக்குள் வால்மார்ட் நுழைந்துள்ளதாகவும் பல விதிமுறைகளை மீறி உள்ளதாகவும் ஆர் எஸ் எஸ் துணை அமைப்பான சுதேசி ஜாக்ரன் மன்ச் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.   மேலும் பல வரத்தக நிறுவனங்களும் இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் வால்மார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டக் மேக்மில்லன் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர், “இது குறித்து ஏற்கனவே பல முறை நாங்கள் உயர் அதிகாரிகளிடம் பேசி உள்ளோம்.  இனி எதிர்காலத்திலும் பேச இருக்கிறோம்.  நாங்கள் ஃப்ளிப்கார்ட்டின் 77% பங்குகளை வாங்க ஒழுங்குமுறை ஒப்புதல்களை பெறுவதில் எங்களுக்கு எவ்வித கஷ்டமும் இருக்காது.  ஏனெனில் இதில் எந்த ஒரு விதி மீறலும் நடக்கவில்லை.

நாங்கள் ஃப்ளிப்கார்ட்டை வாங்குவது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் நல்லது.  இதன் மூலம் பல லட்சக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.   இப்போதைய நிலையில் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என சரியாக கனிக்க முடியாது.   ஆனால் இனி வரும் காலத்தில் சுமார் ஒரு கோடி வேலை வாய்ப்புகள் உண்டாகக் கூடும்.

இந்த வேலை வாய்ப்புகள் வால்மார்ட் நிறுவனத்திலும்,  ஃப்ளிப் கார்ட் நிறுவனத்தின் விநியோக நிறுவனங்களிலும் அதிக அளவில் உருவாகும்.   அத்துடன் வால்மார்ட் 90%க்கும் மேற்பட்ட பொருட்களை உள்நாட்டில் வாங்க உள்ளதால் உள்நாட்டு உற்பத்தி பெருகி அங்கும் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உருவாகும்.

நாங்கள் பிரதமர் மோடியையோ அமைச்சர்களையோ இதுவரை சந்திக்கவில்லை.   ஏனென்றால் வால்மார்ட் புதிய நிறுவனம் அல்ல.   எனவே சந்தித்தே ஆக வேண்டும் என கட்டாயம் எதுவும் இல்லை.  அப்படி சந்தித்தாலும் அது புகைப்படம் எடுத்துக் கொள்ள மட்டுமே தேவைப்படும்.   அப்படி ஒரு விளம்பரம் வால்மார்ட்டுக்கு தேவை இல்லை” என தெரிவித்துள்ளார்.