புதுடெல்லி: பாரதீய ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களுடைய மக்களவைத் தொகுதிகளில் வரும் அக்டோபர் 2 முதல் 31 வரை, மொத்தம் 150 கி.மீ. தொலைவுக்கு பாதயாத்திரை மேற்கொள்ள வேண்டுமென பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
மகாத்மா காந்தி மற்றும் வல்லபாய் படேல் ஆகியோரின் பிறந்தநாள் அனுசரிப்புகளை இந்தப் பாதயாத்திரை உள்ளடக்குகிறது. பாரதீய ஜனதா நாடாளுமன்ற குழு கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பேசிய மோடி இதை தெரிவித்தார்.
மேலும், பாரதீய ஜனதா கட்சி பலவீனமாக இருக்கும் பகுதிகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இப்பகுதிகளில் ராஜ்யசபா உறுப்பினர்கள் கவனம் செலுத்தலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை பெரியளவில் கொண்டாடும் அரசின் திட்டத்துடன் இது ஒருங்கிணைந்துள்ளது.
ஒவ்வொரு தொகுதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு அமைக்கப்பட்டு, அவர்கள் ஒரு நாளில் 15 கி.மீ. நடைபயணம் மேற்கொள்வார்கள். காந்தியடிகள், சுதந்திரப் போராட்டம், மரம் நடுதல் மற்றும் சுகாதாரம் பேணுதல் போன்றவை பாதயாத்திரையில் இடம்பெறும் செயல்திட்டங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.