சென்னை: சசிகலா வெளிப்படையாக பேசும் வரை காத்திருக்கிறேன் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்து உள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஜனவரி 20ம் தேதி முதல் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து டிடிவி தினகரன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் சசிகலாவை மருத்துவமனையில் இருந்து பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள பண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது சசிகலா சென்ற காரின் முகப்பில் அதிமுக கொடி பொருத்தப்பட்டு இருந்தது. அதிமுகவில் சசிகலாவை சேர்க்க வாய்ப்பில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் சசிகலா சென்ற காரில் அதிமுக கொடி இருந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இந் நிலையில், சசிகலா நலமோடு வரவேண்டும் என்பது தான் முதல்வர், துணை முதல்வர், நான் உட்பட எல்லோரின் எண்ணம் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறி இருப்பதாவது:
அம்மா பயன்படுத்திய காரை, சசிகலா பயன்படுத்துகிறார். அவர் நலமோடு வரவேண்டும் என்பது தான் முதல்வர், துணை முதல்வர், நான் உட்பட எல்லோரின் எண்ணம். இப்போது வரை அவர் எதுவும் பேசவில்லை. சசிகலா வெளிப்படையாக பேசும் வரை காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.