விருத்தாசலம்: 
ழமலைநாதர் கோயில் கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.

விருத்தம் என்றால் முதுமை, அசலம் என்றால் மலை. இதனால் பழமலை என்ற பெயரும் இந்த ஊருக்கு உண்டு. 1008 சிவத்தலங்களில் முக்கிய 4 தலங்களில் ஒன்றாக விருத்தாசலம் விளங்குகிறது. காசியை விட வீசம் அதிகம் விருத்தகாசி என்ற பழமொழியும் இக்கோயிலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.

சிவபெருமான் முதன் முதலில் இங்கு மலைவடிவில் தோன்றி காட்சியளித்தார். பின்பு தான் உலகில் உள்ள அனைத்து மலைகளும் உருவாகியது என்றும் திருவண்ணாமலைக்கு முன்பே உருவானதால் அதன் காரணமாக விருத்தாசலத்திற்கு பழமலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. மலையாக இருந்து பின் குன்றாக மாறி அதன் பின்னர்தான் திருத்தலமாக மாறியது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

இறைவனை தரிசனம் கண்ட ஐந்து முனிவர்கள், ஐந்து பிரகாரம், ஐந்து கோபுரம், ஐந்து கொடிமரம், ஐந்து உள்மண்டபம், ஐந்து வெளிமண்டபம், ஐந்து வழிபாடு, ஐந்து தேர், விருத்தகாசி, திருமுதுகுன்றம், விருத்தாசலம், நெற்குப்பை, முதுகிரி என ஐந்து பெயர்கள் உள்ளன. இவ்வாறு எல்லாமே ஐந்து என்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்குள்ள தல விருட்சமான வன்னிமரம் 1700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

இத்தலத்தில் பிறப்பு, வாழ்வது, வழிபடுவது, நினைப்பது, இறப்பது என ஐந்தில் ஒன்று நடந்தாலே முக்தி நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகம்.