சண்டிகர்: 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

காலையிலேயே தனது வாக்கினை செலுத்திய முன்னாள்  மாநில முதல்வர் “இந்த முறை நாங்கள் 50 இடங்களுக்கு மேல் பெறுவோம்” வாக்களித்த பிறகு ஹரியானா முன்னாள் முதல்வர் கட்டார் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்

90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு  ஒரே கட்டமாக இன்று  (அக்.5) தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6மணி வரை நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்காக  மாநிலம் முழுவதும் 20 ஆயிரத்து 632 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, கிராமப்புற பகுதிகளில் 13 ஆயிரத்து 500, நகர்ப் பகுதிகளில் 7 ஆயிரத்து 132, 114 இளைஞர்கள் வாக்குச்சாவடிகள், பெண்களால் நிர்வகிக்கப்படும் 115 வாக்குச்சாவடிகள், 87 மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்குச்சாவடிகள் என அமைக்கப்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் 930 ஆண் வேட்பாளர்கள், 101 பெண் வேட்பாளர்கள் என மொத்தம் ஆயிரத்து 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  மாநிலம் முழுவதும் வாக்களிக்க தகுதியானவர்கள்  2 கோடியே 3 லட்சத்து 54 ஆயிரத்து 650  பேர். இவர்களில்,   1 கோடியே 7 லட்சத்து 75 ஆயிரத்து 957 ஆண் வாக்காளர்கள், 95 லட்சத்து 77 ஆயிரத்து 926 பெண் வாக்காளர்கள் மற்றும் 467 மூன்றாம் பாலினத்தவர்கள்  வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மேலும் இன்று வாக்களிக்க இருக்கும் வாக்காளர்களில்   5.24 லட்சம் முதல்முறை வாக்காளர்கள், 2.31 லட்சம் 85 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் 8 ஆயிரத்து 821 100 வயதுக்கு மேற்பட்டோர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்குப்பதிவையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  40 சிஆர்பிஎஃப் (CRPF) கம்பெனிகள், 25 எல்லை பாதுகாப்பு படையினரின் (BSF) கம்பெனிகள், 45 சிஐஎஸ்எஃப் (CISF) கம்பெனிகள், 35 ஐடிபிபி (IDBP), 45 எஸ்எஸ்பி (SSB) மற்றும் 35 ஆர்பிஎஃப் (RPF) என மொத்தம் 225 கம்பெனி படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள னர். இது தவிர 600க்கும் அதிகமான சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் இணைய வழி கண்காணிப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஹரியானா மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8-ம் தேதி நடைபெற உள்ளது.