டெல்லி: குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதியை அறிவித்தார், இந்தியா தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார். அதன்படி, ஜூலை 18ந்தேதி அன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 21ந்தேதி நடைபெறும் என அறிவித்தார்.

தற்போதைய இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலின்போது, தேர்தல் அதிகாரியாக ராஜ்யசபாவின் செயலாளர் செயல்படுவார் என தெரிவித்தார்.

2022 குடியரசு தலைவர் தேர்தலில், 4,809 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். எந்த அரசியல் கட்சி கொறடாவும், அதன் உறுப்பினர்களுக்கு யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று உத்தரவிட முடியாது என்பதை சுட்டிக்காட்டியவர், ஜூன் 29ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்று கூறியவர்,  ஜூலை 18ந்தேதி அன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 21ந்தேதி நடைபெறும் என அறிவித்தார்.

மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 4,809 (776 எம்பிக்கள் மற்றும் 4,033 எம்எல்ஏக்கள்) என்று கூறியவர்,  தேர்தல் நடைபெறும் இடம் குறித்த பட்டியல் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றப்படும். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்பாக ராஜ்யசபா தேர்தல் இருப்பதால், அதன்பிறகு பட்டியல் புதுப்பிக்கப்படும் என்றும் கூறினார்.

இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ள 776 எம்.பி.க்களின் வாக்கு மதிப்பு 5,43,200 ஆக கணக்கிடப்படும். அதுபோல வாக்களிக்க உள்ள 4033 எம்எல்ஏக்களின் வாக்கு மதிப்பு 5,43,231 என கணக்கிடப்படும். ஆக மொத்தம் 10,86,431 வாக்குகள் உள்ளன. இந்த தேர்தலில் எந்த கட்சி வேட்பாளர் அதிக வாக்குகள் பெறுகிறாரோ அவரே, வெற்றி பெற்றவராவார்.

குடியரசு தலைவர் தேர்தல் விவரம்:

வேட்புமனுத்தாக்கல் தொடக்கம் : 15-06-2022

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் : 29-06-2022

வேட்புமனு பரிசீலனை : 30-06-2022

வேட்புமனு வாபஸ் பெறும் நாள் : 02-07-2022

தேர்தல் வாக்குப்பதிவு : 18-07-2022 (திங்கட்கிழமை)

வாக்கு எண்ணிக்கை : 21-07-2022 (வியாழக்கிழமை)