டெல்லி
இந்திய தேர்தல் ஆணையம் ஒரே எண்ணில் பலருக்கு வாக்காளர் அடையாள அட்டை அளித்துள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் தல்வர்கள் மேற்கு வங்காள மாநிலம் கூச் பெகர்பகுதியில் உள்ள ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும், உத்தரபிரதேச மாநிலம் திதர்கஞ்ச் பகுதியில் உள்ள ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும் ஒன்றாக உள்ளன என்று குற்றம் சாட்டி இருந்தனர். இதனால் போலி வாக்காளர்கள் மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்த வாக்காளர்கள் மேற்கு வங்காளத்தில் உள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி இருந்தார்.
தேர்தல் ஆணையம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”இந்தியாவின் வாக்காளர் பட்டியல் உலகெங்கிலும் உள்ள வாக்காளர் பட்டியலை விட மிகப்பெரிய தரவுத்தளமாகும். இது 99 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இந்த ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண் விவகாரம் ஏற்கனவே தேர்தல் கமிஷனால் தானாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இருந்தது. வாக்காளர் அடையாள அட்டை எண் எப்படி இருந்தாலும், குறிப்பிட்ட வாக்குச்சாவடியை சேர்ந்த வாக்காளர் ஒருவர், அந்த வாக்குச்சாவடியில் மட்டுமே ஓட்டுப்போட முடியும். வேறு எங்கும் வாக்களிக்க முடியாது.
எனினும் நீண்ட காலமாக இருக்கும் இந்த பிரச்சினைக்கு, தொழில்நுட்பக்குழு மற்றும் சம்பந்தப்பட்ட மாநில தேர்தல் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அடுத்த 3 மாதங்களுக்குள் தீர்வு காணப்படும். இவ்வாறு ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண்ணை கொண்டிருக்கும் வாக்காளர்களுக்கு ஒரு தனித்துவமான தேசிய வாக்காளர் அடையாள அட்டை எண் வழங்கப்படும். இந்த புதிய திட்டம் எதிர்கால வாக்காளர்களுக்கும் பயன்படுத்தப்படும்”.
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.