பாட்னா: பீகாரில் முதல்கட்ட சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. 71 தொகுதிகளில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவு மதியம் 1 மணி நிலவரப்படி 33.10% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
பீகாரில் மாநில முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் – பாஜக கூட்டணி, லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகிய மகா கட்பந்தன் அணி, சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி, அசாதுதின் ஓவைசி தலைமையிலான கூட்டணி என நான்கு முனைப் போட்டி நடைபெறுகிறது.
பீகாரில் மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட நிலையில்,, முதற்கட்ட ஓட்டுப் பதிவு இன்று 71 தொகுதிகளில் வாக்குப்பதிவு துவங்கியுள்ளது. வாக்கு சாவடிகளில் தெர்மல் ஸ்கேனர், கையுறைகள், முக கவசங்கள், சோப் உள்ளிட்டவையும் வைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணி தொடங்கிய வாக்குப்பதிவு தொடக்கத்தில் விறுவிறுப்பாக இருந்த நிலையில், நேரம் ஆக ஆக சற்று மந்தமாக நடைபெற்று வருகிறது.
இன்று வாக்குப் பதிவு நடைபெறும் சுமார் 71 தொகுதிகளில் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜேடியூ 35 இடங்களில் போட்டியிடுகிறது. பாரதிய ஜனதா 29, ஆர்ஜேடி 42, காங்கிரஸ் 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியானது மொத்தம் 41 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.
இவர்களில் 8 அமைச்சர்கள் மற்றும் ஒரே ஒரு பெண் வேட்பாளர் உள்பட மொத்தம் 1064 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்பிரகாஷ் நாராயண் யாதவின் மகளான 28 வயது திவ்யா பிரகாஷூம் இம்முறை தாராபூர் தொகுதியில் ஆர்ஜேடி வேட்பாளராக களத்தில் இறங்கியுள்ளார். சுமார் 2.14 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்துகின்றனர்.
வாக்குப்பதிவு நடைபெற்று வரும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று மதியம் 1 மணி நிலவரப்படி 33.10% வாக்குகள் பதிவாகி உள்ளன.
இரண்டாம் கட்டமாக, நவம்பர் 3 ஆம் தேதி 17 மாவட்டங்களில் 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும், மூன்றாம் கட்ட வாக்குகள் நவம்பர் 7 ஆம் தேதியும், அதே நேரத்தில் நவம்பர் 10 ஆம் தேதி வாக்களிப்பு நடைபெறும்.