டெல்லி: வாக்காளர் பட்டியல் விவகாரம்  தொடர்பாக  தேர்தல் ஆணையத்தை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் இன்று எதிர்க்கட்சிகள் பேரணி நடைபெற உள்ளது. டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் வரை நடைபெறும் இப்பேரணியில் இந்தியா கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்க உள்ளனர்.

பீகாரில் தேர்தல் ஆணையம் நடத்திய அதிரடி சீர்திருத்தம் காரணமாக, சுமார் 65 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பதாக கூறி, அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி நடவடிககை எடுத்துள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, மக்களவையை முடக்கி வருகின்றனர். தேர்தல் ஆணையம் பாஜகவுடன் கூட்டு வைத்து, வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய அளவில் மோசடி செய்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி வருகிறார்.  தொடர்ந்து போலி வாக்காளர் பட்டியல் விவகாரத்தையும் வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில்,  வாக்காளர் பட்டியல் குளறுபடி தொடர்பாக ராகுல் காந்தி தலைமையில் ’இந்தியா’ கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் இன்று டெல்லியில் பேரணி செல்ல உள்ளனர்.
இந்நிலையில், இன்று ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 300 பேர், நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் வரை பேரணியாக சென்று, தேர்தல் ஆணையரை சந்தித்து மனு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே, ஓட்டுத்திருட்டுக்கு எதிராக பொதுமக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அழைப்புவிடுத்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வாக்குகள் திருடப்படுவது, ஒரு நபர் – ஒரு ஓட்டு என்ற அடிப்படை கருத்தியலுக்கே எதிரானது என்று குறிப்பிட்டுள்ளார்.